அபுதாபி விமான நிலைய பயணிகளுக்கு புதிய சிட்டி செக்-இன் சேவை!! எங்கு தெரியுமா???
அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்காக யாஸ் ஐலேண்டில் உள்ள யாஸ் மாலில் புதிதாக சிட்டி செக்-இன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செக்-இன் சேவையானது எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் ஏர் அரேபியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செக்-இன் பகுதியானது தரை தளத்தில் உள்ள மட்கேப் அபுதாபியை (Madcap Abu Dhabi) ஒட்டிய ஃபவுண்டைனில் அமைந்துள்ளதாகவும், இது தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரல் குழுமம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை – அபுதாபி (DCT – அபுதாபி), அபுதாபி ஏர்போர்ட்ஸ் மற்றும் OACIS Middle East போன்ற நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மை மூலம் இந்த செக்-இன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆண்டுதோறும் 45 மில்லியன் பயணிகளுக்கு ஹோஸ்ட் செய்யக்கூடிய அதிநவீன டெர்மினல் A தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒத்துழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மிரல் (Miral) குழுமத்தின் CEO முகமது அப்தல்லா அல் ஜாபி பேசுகையில், “யாஸ் மாலில் உள்ள ஃபவுண்டைன் அருகில் அமைந்துள்ள இந்த விமான நிலைய செக்-இன் சேவையானது, அபுதாபியை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு பங்களிப்பதுடன் யாஸ் ஐலேண்டை ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்கான உலகளாவிய இடமாக நிலைநிறுத்துவதற்கான எங்கள் இடைவிடாத முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும்” என்று கூறியுள்ளார்.
புதுமையான இந்த ரிமோட் செக்-இன் சேவையானது தடையற்ற மற்றும் மறக்கமுடியாத பயண அனுபவத்தை உறுதிப்படுத்த உதவும் என்று கூறிய அபுதாபி ஏர்போர்ட்ஸின் CEO எலினா சோர்லினி, உலகளாவிய சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து மையமாக அபுதாபியின் நிலையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய OACIS Middle East நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO டிட்டேன் யோஹன்னன், மதிப்புமிக்க பயணிகளுக்கு அதிகரித்த பயண நெகிழ்வுத்தன்மை மற்றும் மன அமைதியை வழங்கும் இந்த ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
செக்-இன் கட்டணங்கள்
- பெரியவர்கள் (12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) – ஒரு நபருக்கு 35 திர்ஹம்ஸ்
- சிறியவர்கள் (12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள்) – 25 திர்ஹம்ஸ்
- குழந்தைகள் (2 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள்) – 15 திர்ஹம்ஸ்
1 comment