26.9 C
Munich
Saturday, July 27, 2024
Home Blog

வங்கதேச வன்முறை; 105 பேர் பலி: 778 மாணவர்கள் இந்தியா வந்தனர்.

வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.

தற்போது, கிடைக்கக்கூடிய வழிகளை பயன்படுத்தி, இந்திய மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோலாகலமாக துவங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா..!

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக துவங்கியது. பதக்கம் வெல்லும் இலக்குடன் இந்திய படை களமிறங்குகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கி (ஜூலை 26-) ஆக.

11 வரை நடக்க உள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இதன் துவக்க விழா மைதானத்தில் நடப்பது வழக்கம்.இந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டு பிரிவில் 329 போட்டிகள் நடக்கிறது.முதன்முறையாக பாரிசின் சென் நதியில் துவக்க விழா ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. 100 படகுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் செல்ல உள்ளனர்.

பாரிசின் அழகை ரசித்தவாறு 6 கி.மீ., துாரத்திற்கு படகில் பயணிக்கலாம். நதியின் இரு புறமும் அமர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் துவக்க விழாவை காண குவிந்துள்ளனர்.பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா ஆகியோர் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின் நடைபெற்ற அணிவகுப்பில் நம் மூவர்ணக்கொடியை சிந்து, சரத் கமல் ஏந்தி வந்தனர்.

இப்போட்டியில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதில் தடகளம் (29), துப்பாக்கி சுடுதில் (21), ஹாக்கி (19) என மூன்று போட்டியில் மட்டும் 69 பேர் கலந்து கொள்கின்றனர்.

சவுதி-குவைத் இடையே அதிவேக ரயில் சேவை..!

சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளிடையே அதிவேக ரயில் சேவை துவங்குவதற்குண்டான திட்டத்திற்கு இருநாடுகளின் திட்ட மேலாண்மை குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ரியாத் மற்றும் ஷதாதியாக பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 500 கி.மீ தூரத்திற்கான விரைவு ரயில் சேவை 1 மணிநேரம் 40 நிமிடங்களில் சென்றடையும்.திட்ட செயல்வடிவிற்கு உலக நாடுகளின் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் துவங்கி 2030 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தினசரி 6 சுற்றுக்கள் பயணம் திட்டமிடப்பட்டு 3300 பயணிகள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் துவங்கும் நேரத்தில் இப்படியா? பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்; லட்சக்கணக்கானோர் பாதிப்பு..!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளை சேதப்படுத்தியும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகருக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதால் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் கோடிக்கணக்கான மக்களும், பிரபலங்களும் பிரான்ஸ் வருகை தந்துள்ளனர். இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் நகரம் முழுவதுமே பிரமாண்டமான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்துள்ளது.

இதற்கிடையே, பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என அந்நாட்டில் சில கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் வகையிலான பல சதிச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், உளவுப்படையினரின் உதவியுடனும், ராணுவம், போலீசாரின் கண்காணிப்புடனும் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டன.

இன்று ஒலிம்பிக் துவக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், நேற்று இரவு பாரீஸையும், மற்ற நகரங்களையும் இணைக்கும் ரயில் தண்டவாளங்களை கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தினர். அந்த ரயில் பாதைகளில் பல இடங்களில் அவர்கள் தீ வைத்தனர்; சில ரயில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கான ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் ஒலிம்பிக் போட்டியை பார்க்க பல நாடுகளில் வந்திருந்த சுமார் 8 லட்சம் பார்வையாளர்கள், பாரீசுக்கு செல்ல முடியாமல் நகரத்துக்கு வெளியே தவிக்கின்றனர்.

சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் அங்கு நடந்து வருகின்றன. இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

நேபாள விமான விபத்தில் பைலட் தப்பியது எப்படி?

காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், விமானி உயிர் தப்பியது எப்படி என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. பராமரிப்பு பணிக்காக சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர்.

இரு விமானிகளில் ஒருவரான மனீஷ் சக்யா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், காத்மாண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானி மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ராம் தத் ஜோஷி கூறியதாவது:

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, ஓடுதளம் அருகே தாழ்வாக பறந்தது. அப்போது, விமானத்தின் காக்பிட்டின் ஒரு பகுதி அங்கிருந்த கன்டெய்னரில் மோதியது. அப்பகுதி மட்டும் துண்டாகி தனியாக விழுந்தது. உடைந்த காக்பிட் பகுதியில், விமானி மனீஷ் மட்டும் இருந்தார். கீழே விழுந்த மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர். மனீஷ் இருந்த பகுதி தனியாக விழுந்ததாலேயே அவர் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விபத்து குறித்து விசாரணை நடத்த முன்னாள் விமான போக்குவரத்து துறை இயக்குனர் ரதீஷ் சந்திரலால் சுமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

ஒலிம்பிக் திருவிழா இன்று பாரீஸில் துவக்கம்..!

பாரீஸ்: உலக நாடுகள் பங்கு கொள்ளும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் திருவிழா இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கோலாகலமாக துவங்குகிறது.நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. 33வது முறையாக பிரான்ஸ் தலைநகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டி இன்று (ஐூலை 26) தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது.

இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இம்முறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சம எண்ணிக்கையில் பங்கு கொள்கிறார்கள். மொத்தம் உள்ள 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள், 324 வகை பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

இம்முறை அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 592 பேரும் சீனாவில் இருந்து 338 பேரும் இம்முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கிறார்கள். ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். .

அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம்..!

0

ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.இண்டினோலா நகரில் உள்ள இரவு விடுதிக்கு அருகே யாரோ ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.”பலர் வெளியே நின்று கொண்டிருக்கும் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளனர்” என்று இந்தியனோலா காவல்துறைத் தலைவர் ரொனால்ட் சாம்ப்சன் உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.துப்பாக்கி சூடு ஏன் நடத்தப்பட்டது என்பதற்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.மேலும், இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.டஜன் கணக்கான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியுள்ளன.

ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை: கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு..!

0

ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அவரது பிரசாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகுவதால் விரைவில் அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கினார். 81 வயதாகும் நிலையில் பைடன் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். டிரம்புடன் நடந்த நேரடி விவாதத்தில் பைடன் பேசுவதற்கு மிகவும் தடுமாறினார். அதேபோல் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்றும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசை டிரம்ப் என்றும் தவறுதலாக கூறினார்.

இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்றும் இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடன் விலக வேண்டும் என்று கூறி இருந்தார். இதனையடுத்து அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.

தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபராக போட்டியிடுவதற்கும் பைடன் ஆதரவு தெரிவித்தார்.ஆனால் இதுவரை ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிவிக்கவில்லை. கட்சியினரின் பெரும்பான்மை ஆதரவு கமலா ஹாரிசுக்கு இருப்பதால் அவரே அதிபராக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவரது பிரசாரத்திற்கு நன்கொடைகள் குவிந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அவருக்கு 81 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், ரூ.677 கோடி) நன்கொடை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகுவதையே இது காட்டுகிறது.இதனால் கமலா ஹாரிசுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரத்தைத் துவங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, ‘பைடன் ஹாரிஸ்’ பிரசாரக்குழு என்று இருந்த பெயர், தற்போது ‘ஹாரிஸ் பார் பிரசிடென்ட்’ என்று மாற்றப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சீன கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றது. ‘கெமி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் கிழக்கு தைவானை நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டின் அருகே உள்ள கடலில் மையம் கொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து பிலிப்பைன்சில் கனமழை வெளுத்து வாங்கியது. அங்குள்ள கரையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக முக்கிய நகரங்கள் சின்னா பின்னமானது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள் ஆகியவை சூறைக்காற்றில் சிக்கி வேரோடு சாய்ந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் இருந்த 6 லட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. பொது போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்கும் பணியில் அந்த நாட்டின் பேரிடர் மீட்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பிலிப்பைன்சில் கனமழைக்கு 13 பேர் உயிரிழந்ததாக அந்தநாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு; முதலிடத்தில் சிங்கப்பூர்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ‘ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின்(IATA) தரவுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் 2-வது இடத்தில் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.

தொடர்ந்து 3-வது இடத்தில் ஆஸ்திரியா, பின்லாந்து, அயர்லாந்து, லக்சம்பெர்க், நெதர்லாந்து, தென் கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இதையடுத்து 4-வது இடத்தில் பிரிட்டன், நியூசிலாந்து, நார்வே, பெல்ஜியம், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும், 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் உள்ளன. இந்த பட்டியலில் அமெரிக்கா 8-வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியுட என கூறப்பட்டுள்ளது.

இந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பாஸ்போர்ட் மூலம் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த பட்டியலின் 100-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே வார்த்தை தான்… திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து! – அதிரவைத்த தம்பதி!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னாலும், சிலருக்கு அது சொர்க்கமாகவும், சிலருக்கு அது நரகமாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், குவைத்தில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.அங்குள்ள வழக்கப்படி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி முன்னிலையில் திருமணத்தை முடித்துக் கொண்ட தம்பதி, அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது, படிக்கட்டில் நடந்து வந்த மணப்பெண் கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கை கொடுத்து தாங்குவதற்கு பதிலாக மணமகன் சொன்ன வார்த்தையால் மணப்பெண் அதிர்ந்து போனார். அதாவது, மணமகள் கீழே விழுந்ததும், அவரைப் பார்த்து, ”முட்டாள், பார்த்து நடக்கமாட்டாயா?” என்று கேட்டதுதான் மணப்பெண்ணுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று நினைத்த மணமகள் உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்ததால், திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த பந்தம் முடிவுக்கு வந்தது.