Last Updated on: 20th July 2024, 08:04 pm
வங்கதேசத்தில் நடந்து வரும் போராட்டத்தால், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், 778 இந்திய மாணவர்கள் தாயகம் நோக்கி திரும்பினர்.கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடாக பிரிந்தது. இந்த போரில் உயிர் தியாகம் செய்தோர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு அந்நாட்டு அரசு வேலையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2018ல் நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்து வரும் மோதலில், இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.
பள்ளி, கல்லூரிகள் மூடல்
அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. மாணவர்கள், விடுதிகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் டாக்காவில் உள்ள இந்திய துாதரகம் செய்து வருகிறது.
தற்போது, கிடைக்கக்கூடிய வழிகளை பயன்படுத்தி, இந்திய மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் சுமார் 4 ஆயிரம் பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.