ஒரே வார்த்தை தான்… திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் நடந்த விவாகரத்து! – அதிரவைத்த தம்பதி!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொன்னாலும், சிலருக்கு அது சொர்க்கமாகவும், சிலருக்கு அது நரகமாகவும் இருந்து வருகிறது. பல ஆண்டுகள் உயிருக்கு உயிராக காதலித்தவர்கள் கூட திருமணத்திற்கு பிறகு சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்கிச் செல்கின்றனர்.

ஆனால், குவைத்தில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.அங்குள்ள வழக்கப்படி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி முன்னிலையில் திருமணத்தை முடித்துக் கொண்ட தம்பதி, அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது, படிக்கட்டில் நடந்து வந்த மணப்பெண் கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கை கொடுத்து தாங்குவதற்கு பதிலாக மணமகன் சொன்ன வார்த்தையால் மணப்பெண் அதிர்ந்து போனார். அதாவது, மணமகள் கீழே விழுந்ததும், அவரைப் பார்த்து, ”முட்டாள், பார்த்து நடக்கமாட்டாயா?” என்று கேட்டதுதான் மணப்பெண்ணுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் என்னவெல்லாம் செய்வாரோ என்று நினைத்த மணமகள் உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்ததால், திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த பந்தம் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times