பள்ளி மாணவர்கள் 20 நாட்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய சட்டம்

ரியாத்: தகுந்த காரணங்கள் இன்றி மாணவர்கள் 20 நாட்கள் அல்லது அதற்கு மேல் பள்ளிக்கு வராமல் இருந்தால் மாணவர்களின் பெற்றொர் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று சவுதி அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில் ஒரு புதிய கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசாங்கம் அமல்படுத்துகிறது. அதன்படி, ஒரு மாணவர் முறையான காரணங்கள் எதுவுமின்றி 20 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் இந்த வழக்கு நீதிமன்றம் கொண்டு செல்லப்படும். மாணவரின் விடுப்புக்கு பெற்றோரின் அலட்சியம்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டால் பெற்றோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கல்வியாண்டில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த புதிய சட்டத்தை சவுதி அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கு வராத மாணவரின் பெற்றோருக்கு எதிரான இந்த சட்ட நடைமுறை பல கட்டங்களை உள்ளடக்கியது என்று கூறப்பட்டுள்ளது. முதலாவதாக, பள்ளி தலைமையாசிரியர் வழக்கை கல்வித் துறையிடம் புகாரளிக்க வேண்டும். இது தொடர்பான விசாரணைக்குப் பிறகு, கல்வி அமைச்சகம் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். பின்னர், மாணவர் பள்ளிக்கு வராத காரணத்தை தீர்மானிக்க குடும்ப பராமரிப்பு துறை தனியாக விசாரணை நடத்தும். இதன் பிறகே இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.

4 thoughts on “பள்ளி மாணவர்கள் 20 நாட்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை: சவுதியில் புதிய சட்டம்”

Leave a Comment

Exit mobile version