சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்… | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு

கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார்.சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர்.

உலக வங்கிக்கு அஜய் பங்கா தலைவராக உள்ளார். ஸ்டார்பக்ஸ் (லக்‌ஷமன் நரசிமன்), காக்னிசன்ட் (ரவி குமார்), மைக்ரான் டெக்னாலஜி (சஞ்சய் மஹோத்ரா), சேனல் (லீனாநாயர்) உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைச் செயல் அதிகாரிகளாக உள்ளனர்.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது உலக அளவில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இந்தியர்களின் திறமையை பாராட்டும் வகையில் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியா வரத் திட்டம்: அடுத்த ஆண்டு இந்தியா வரத் திட்டமிட்டு இருப்பதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூன் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு துறைகளைச் சார்ந்த நபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து, டெஸ்லா இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இந்நிலையில், 2024-ம் ஆண்டு இந்திய வரத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

1 thought on “சுந்தர் பிச்சை, சத்ய நாதெள்ளா, சாந்தனு நாரயண்… | சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ.வாக அதிகளவில் இந்தியர்கள்: எலான் மஸ்க் வியப்பு”

Leave a Comment

Exit mobile version