உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேல் படையினர் – காசாவில் தொடரும் கொடூரங்கள்!
காசா: தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி கல் மனதையும் கலங்கச் செய்கிறது. காசாவில் 5,00,000-க்கும் அதிகமானோர் அல்லது நான்கு பேரில் ஒருவர் பஞ்சத்தின் ஆபத்தில் இருக்கின்றனர் என உலக உணவுத் திட்டத்தின் துணை நிர்வாக இயக்குநர் எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். உணவு, தண்ணீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு கூட வழியில்லாமல் அல்லாடி வருவது பார்ப்போரை பதைபதைக்கச் செய்கிறது.
காசா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அங்கு உணவு கொடுக்க வந்த லாரியை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்ட காட்சி பலரது மனங்களையும் உலுக்கியுள்ளது. தெற்கு காசாவில் உணவுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் மீது இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் தற்போதைய ‘இனப்படுகொலை போரின்’ ஒரு பகுதியாகும். பொதுமக்களை பாதுகாப்பதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான். சர்வதேச சமூகம் அவசரமாக தலையிட்டு இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
1 comment