Last Updated on: 26th February 2024, 09:45 pm
தற்போது, உலகத்தின் ஒர் முனையிலிருந்து மறுமுனையில் இருப்பவருடன் வலைப் பின்னல் உதவியுடன் கைபேசி மூலமாகப் பேச முடிகிறது. காணொளிக் காட்சியில் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. விஞ்ஞானத்தின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு பெரிதும் உதவுகிறது. ஆனால், இந்தச் சேவைகளை அளிக்கும் செல்லுலர் நிறுவனங்களில், சற்றும் எதிர்பார்க்காத காரணங்களால் தடைகள் ஏற்படும்போது, அது பல்லாயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
சென்ற வியாழக்கிழமை, பிப்ரவரி 22ஆம் தேதி, அமெரிக்காவின் மிகப்பெரிய செல்லுலர் நிறுவனமான ஏடி&டி (AT & T) செல்லுலர் சேவையில் ஏற்பட்ட செயலிழப்பால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டனர். இந்தப் பாதிப்பு பெரும்பாலும் ஹூஸ்டன், சிகாகோ, டல்லாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அட்லாண்டாவில் ஏற்பட்டது. அதிகாலை 4 மணியளவில், சுமார் 32000 வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்பட, 7 மணியளவில் அது 50000க்கும் மேலாக அதிகரித்து, பின் 71000 வாடிக்கையாளர் என உயர்ந்தது.வலைப்பின்னல் சேவைகள் மற்றும் செல்லுலர் சேவைகள் பாதிக்கப்பட்டதை அறிவித்த AT & T, அவர்களுடைய க்ளௌட் (Cloud) சேவையில் ஏற்பட்ட பாதிப்பு என்றது. அமெரிக்காவின் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், இது மனிதப் பிழை என்று கூறுவதற்கான ஆடம்பர வார்த்தை என்கிறார். ஆனால், இந்த நாடு தழுவிய சேவை சீர்குலைவைத் தூண்டியது எது என்ற விவரங்களை, அந்த நிறுவனம் இதுவரை அறிவிக்க வில்லை. இந்தச் சேவை பாதிப்பு, வெரிசோன், டி-மொபைல், கிரிக்கெட் வயர்லெஸ் என்று மற்ற செல்லுலர் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் களையும் பாதித்தது. (இவர்களில் சிலர் AT & T வலைப்பின்னல் உதவியுடன் சேவை அளிக்கின்றனர்.)
இதைப்போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, பொது மக்களின் முக்கிய கவலை, இது சைபர் தாக்குதலாக இருக்குமோ என்பது. ஆனால், இந்த செயலிழப்பு, சைபர் தாக்குதல் இல்லை என்று அமெரிக்க சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய தகவல் தொடர்பு ஆணையம் தீவிரமாக விசாரித்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 911 என்ற அவசர உதவி எண், போலீஸ், ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு உதவிக்கு மிகவும் முக்கியமான எண். சேவை முடக்கத்தால், கைபேசி மூலம் இந்த எண்ணைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவசர உதவிக்கு லேண்ட்லைனில் இருந்து தொடர்பு கொள்ளும்படி மக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
2022ஆம் வருடம் ஜூலை மாதம் எட்டாம் தேதி கனடாவில் இதைப்போன்ற செல்லுலர் பாதிப்பு ஏற்பட்டது… ரோஜர்ஸ் என்ற குழுமத்தின் வலைப்பின்னலில் மென்பொருள் பராமரிப்பு செய்யும்போது நேர்ந்த தவறினால் நாட்டின் பல இடங்களில் வலைப்பின்னல் சேவைகள் முடங்கின. இது சில இடங்களில் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
இங்கு கம்பியில்லா சேவை, கம்பி மூலமாக சேவை, ஊடகம், அலைபேசி வலைப்பின்னல் எல்லாம் ரோஜர்ஸ் குழுமத்தின் கீழ். இதன் விளைவு அலைபேசி செயலி செயலிழந்ததால் மற்றவர்களைக் கூப்பிட்டு நிலைமை எடுத்துச் சொல்ல முடியவில்லை. என்னுடைய ஏர்டெல் கைபேசி செயலிக்கு கனடாவில் பேசும் வசதிக்காக இணைப்பு எடுத்திருந்தேன். ஆனால், இந்த இணைப்பும் ரோஜர்ஸ் குழுமத்தின் உள்ள ஒரு அமைப்பின் மூலமாக. அதனால் அதுவும் இயங்கவில்லை.
தொலைக்காட்சி இணைப்பும் ரோஜர்ஸ் உபயம். ஆகவே தொலைக்காட்சி பார்த்து நிலைமை அறியும் வழியுமில்லை. காலை எழுந்தவுடன் அலெக்ஸாவைக் கூப்பிட்டு தட்ப வெட்ப நிலை அறிவதுண்டு. வலைப்பின்னல் உறக்கத்தில் அலெக்ஸாவும் உறங்கிவிட்டாள். காரில் ஏறி வெளியே சென்று வரலாம் என்றால் ஜிபிஎஸ் மூலம் வழி சொல்வதற்கு அலெக்ஸா இல்லை. ‘எல்லா முட்டைகளும் ஒரே கூடையில்’ என்பதுபோல எல்லாம் ரோஜர்ஸ் கையில். ஆகவே எல்லா சேவைகளும் முடங்கிவிட்டன.
கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான மளிகை, காய்கறி, பழங்கள் வாங்கி வரலாம் என்றால் வணிக வளாகங்களில் “வலைப் பின்னல் இல்லாததால் கிரெடிட் கார்ட் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. ஆகவே, பணம் கொடுத்து வாங்கிச் செல்லுங்கள்” என்ற அறிவிப்புப் பலகை. தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கலாம் என்றால் அதுவும் இயங்கவில்லை.மேம்பட்ட தொழில் நுட்பம் மனிதனின் வசதியான வாழ்க்கைக்கு உதவுவதற்காக உண்டாக்கப்பட்டது.
ஆனால், அதில் சில நேரங்கள் கோளாறு ஏற்பட்டால் அதை நம்பியிருக்கும் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். கத்தி, துப்பாக்கி ரத்தமின்றி ஒரு நாட்டைச் செயலிழக்க, அதனுடைய வலைதளச் சேவைகளை முடக்கினால் போதும் என்பது பேரதிர்ச்சி.