Last Updated on: 17th April 2024, 08:39 pm
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட சமயத்தில் எக்ஸ் தள சேவை பாகிஸ்தானில் முடக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் எக்ஸ் தள சேவையில் பல்வேறு தடங்கல் இருந்துவந்தன. இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையின்போது எக்ஸ் தளத்துக்கு தடை விதித்திருப்பதை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
வழக்கின் விசாரணையின்போது, “பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கத் தவறியது. எக்ஸ் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும். அதனை நிறுவனம் சரசெய்யவில்லை. எனவேதான், தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
எக்ஸ் நிறுவனம் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயக்கம் காட்டியது” என்று பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் தடை குறித்து விளக்கமளித்தார்.
இதன்பின் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், “ஒரு வாரத்துக்குள் எக்ஸ் தள முடக்கத்தை பாகிஸ்தான் அரசு கைவிட வேண்டும்” என்று கூறி அவகாசம் அளித்தது.