ஒலிம்பிக் துவங்கும் நேரத்தில் இப்படியா? பிரான்சில் ரயில்கள் மீது தாக்குதல்; லட்சக்கணக்கானோர் பாதிப்பு..!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்கள் ரயில் பாதைகளை சேதப்படுத்தியும், ரயில்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் பாரீஸ் நகருக்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று (ஜூலை 26) கோலாகலமாக துவங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பாரீஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளதால் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் கோடிக்கணக்கான மக்களும், பிரபலங்களும் பிரான்ஸ் வருகை தந்துள்ளனர். இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள்,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். பாரீஸ் நகரம் முழுவதுமே பிரமாண்டமான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு செய்துள்ளது.

இதற்கிடையே, பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக்கூடாது என அந்நாட்டில் சில கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஒலிம்பிக் போட்டியை சீர்குலைக்கும் வகையிலான பல சதிச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், உளவுப்படையினரின் உதவியுடனும், ராணுவம், போலீசாரின் கண்காணிப்புடனும் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டன.

இன்று ஒலிம்பிக் துவக்க விழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், நேற்று இரவு பாரீஸையும், மற்ற நகரங்களையும் இணைக்கும் ரயில் தண்டவாளங்களை கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தினர். அந்த ரயில் பாதைகளில் பல இடங்களில் அவர்கள் தீ வைத்தனர்; சில ரயில்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நேற்று இரவு முதல் நூற்றுக்கணக்கான ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதனால் ஒலிம்பிக் போட்டியை பார்க்க பல நாடுகளில் வந்திருந்த சுமார் 8 லட்சம் பார்வையாளர்கள், பாரீசுக்கு செல்ல முடியாமல் நகரத்துக்கு வெளியே தவிக்கின்றனர்.

சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் அங்கு நடந்து வருகின்றன. இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment