Last Updated on: 5th February 2024, 08:58 pm
ரத்தன் தாத்தாவின் டாட்டா குழுமம், ஆப்பிள் நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனமான Pegatron நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் மற்றொரு ஐபோன் உற்பத்தி பிரிவை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஏற்கனவே டாட்டா குழுமம் ஓசூரில் அமைத்துள்ள ஐபோன் கேசிங் யூனிட்டியின் ஆலையை இரு மடங்கு விரிவுபடுத்த உள்ளது. இதன் மூலமாக இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி யூனிட் ஓசூரில் உருவாகப் போகிறது. ஓசூரில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஐபோன் அசெம்பிளி யூனிடில் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பணி புரிகின்றனர். இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 25,000 அதிகமான ஊழியர்கள் அங்கு பணியமர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15ன் எல்லா பதிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள ஐபோன் உற்பத்தி மையத்திலேயே உருவாக்கப்பட்டன. இதனால் முதல்முறையாக, வெளிநாடுகளில் ஐபோன் விற்பனைக்கு வந்த அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற இடங்களிலும் போன்கள் விற்பனைக்கு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், 2024ஆம் பாதியில் ஐபோன் 17ஐ உருவாக்க தொடங்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இதனால் முதன்முறையாக ஒரு புதிய போன் சீரியஸ் சைனாவுக்கு வெளியே உருவாக்கப்பட உள்ளதாக ஆப்பிள் நிறுவன ஆய்வாளர் கூறியுள்ளார். அதாவது சீனாவில் ஐபோன் 17 உற்பத்தி தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் உற்பத்தியைத் தொடங்க உள்ளனர்.
சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க பெரு நிறுவனங்கள் சென்னையில் தங்களது நிறுவனத்தைத் தொடங்க ஆர்வம் காட்டுவதால், உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பார்வை சென்னை மீது திரும்பியுள்ளது. மேலும் Pegatron நிறுவனம் சென்னையில் முதலீடுகளை அதிகப்படுத்தி, ஐபோனில் மொத்த பாகங்களையும் சென்னையிலேயே உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. எனவே இனிவரும் காலங்களில் ஐபோனின் எல்லா பாகங்களும் சென்னையிலேயே மொத்தமாக உருவாக்கப்படும். அதன்படி முதல் முறை ஐபோன் 17 முழுக்க முழுக்க தமிழ்நாட்டிலே உருவாக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.