Last Updated on: 6th March 2024, 11:43 am
நியூயார்க்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்தார்.ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் நேற்றைய மதிப்பீட்டின்படி, எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198 பில்லியன் டாலராக (ரூ.16.43 லட்சம் கோடி) குறைந்துள்ள நிலையில் ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலராக (ரூ.16.60 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. முன்பு, எலான் மஸ்க் உடன்ஒப்பிடுகையில் சொத்து மதிப்பில் ஜெஃப் பிசோஸ் மிகவும் பின்தங்கிஇருந்தார்.
2022-ம் ஆண்டுக்குப் பிறகு அமேசான் பங்கு மதிப்புஇருமடங்கு உயர்ந்தது. அதேசமயம், 2021-க்குப் பிறகு எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 50 சதவீதம் சரிவைக் கண்டது. இதனால், ஜெஃப் பிசோஸின் சொத்து மதிப்பு எலான் மஸ்கை நெருங்கியது. இந்நிலையில், தற்போது எலான் மஸ்கைப் பின்னுக்குத் தள்ளி ஜெஃப் பிசோஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் லூயி உட்டான் நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் 197 பில்லியன் டாலர் (ரூ.16.35 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 3-ம் இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் 179 பில்லியன் டாலர் (ரூ.14.85 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 4-ம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 150 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் (ரூ.12.45 லட்சம் கோடி) 5-ம் இடத்திலும் உள்ளனர்.
115 பில்லியன் டாலர் (ரூ.9.54 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 11-ம் இடத்திலும், 104 பில்லியன் டாலர் (ரூ.8.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் கவுதம் அதானி 12-ம் இடத்திலும் உள்ளனர்