Last Updated on: 8th November 2023, 08:41 pm
உலகிலேயே காஸ்ட்லியான ஓட்டல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. துபாயில் உள்ள இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்கு மட்டும் ரூ. 83 லட்சம் வசூலிக்கப்படுகிறது. அதுபற்றிய தகவல்களை பார்க்கலாம்.காஸ்ட்லி ஓட்டல் குறித்த விபரங்களை பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் தான இந்த காஸ்ட்லியான ஓட்டல். 4 பெட்ரூம், 4 பாத்ரூம் மற்றும் 12 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உள்ள டைனிங் டேபிள், நீச்சல் குளம், துபாயின் பரந்த வானத்தை கண்டு களிக்க மொட்டை மாடி உள்ளிட்டவை இந்த அறையில் உள்ளன.
இதை தவிர்த்து இன்டூர் மற்றும் வெளிப்புறத்தில் சமையல் அறைகள், படம் பார்ப்பதற்கு தியேட்டர், அலுவலகம், நூலகம், பார் வசதி, விளையாட்டு அறைகள் ஆகிய வசதிகள் இந்த ஓட்டல் அறையில் செய்து தரப்பட்டுள்ளன. அத்துடன் 10 இருக்கைகளை கொண்ட அரேபிய மாடல் கான்பரன்ஸ் அறை ஆகியவற்றையும் கொண்டுள்ளது ஓட்டல் அட்லான்டிஸ் தி ராயலில் உள்ள காஸ்ட்லியான அறை.
இந்த ஓட்டலில் பலவித அறைகள் இருப்பினும் ஓர் இரவுக்கு ரூ. 83 லட்சம் வசூலிக்கும் அறைக்கு அல்ட்ரா லக்சரி என்று பெயர் வைத்துள்ளார்கள். சொகுசு ஓட்டல் கடந்த ஜனவரியில்தான் திறக்கப்பட்டு சேவைக்கு வந்துள்ளது. இதையொட்டி சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் பாடகர் பியோனஸின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பியோனஸின் இசை நிகழ்ச்சிக்காக மட்டும் அவருக்கு 2.40 கோடி அமெரிக்கா டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 200 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்லான்டிஸ் தி ராயல் ஓட்டலின் சொகுசு அறையில் உலகின் பல முன்னணி கோடிஸ்வரர்கள் தங்கி சென்றுள்ளனர். இதேபோன்று பல பிரபலங்களுக்கும் இந்த அறையில் ஓட்டல் சார்பாக சிறப்பு விருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன