தொடர்ந்து 2-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை: மீண்டும் இந்தியா முன்னிலை..!

சீனாவின் மக்கள்தொகை 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் கோவிட்-19 இறப்புகளின் அலை காரணமாக சீனாவின் மக்கள்தொகை 2023 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாகக் குறைந்துள்ளது,

இது தொடர்பாக நாட்டின் தேசிய புள்ளிவிவரங்கள் துறை (NBS) அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உலக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வந்த சீனா, 2022ஆம் ஆண்டு கரோனா தொற்றுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் மக்களை இழந்தது. இதனால் 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக சீன மக்கள் தொகை கணிசமான அளவு குறைந்தது.

2022ஆம் ஆண்டு பிறப்பு விகிதம் 95.6 லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆயிரத்துக்கு 6.39 சதவீதம் என்ற அடிப்படையில் அது, 90.2 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு கோவிட் மரணங்கள் அதிகரித்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 6.6 சதவீதம் உயர்ந்து 1.11 கோடியாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1980 முதல் 2015 வரை சீனாவில் அமலபடுத்தப்பட்டிருந்த ‘ஒரு குழந்தை’ கொள்கையின் விளைவாக நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, 2016 ஆம் ஆண்டில், அந்தக் கொள்கையை ரத்து செய்த சீன அரசு, 2021ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி வழங்கியது.கடந்த ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times