ராணுவ சட்டம் பிரகடனத்தால் வந்த விளைவு; தென்கொரியா அதிபரை கைது செய்ய கோர்ட் வாரன்ட்!

சியோல்: ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த காரணத்தினால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரியா நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, அந்நாட்டின் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், 63, அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகளும், ஆளுங் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், சில மணி நேரங்களில் அவசரநிலை அறிவிப்பை யூன் சுக் இயோல் திரும்பப் பெற்றார். இதற்கிடையே, ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்த யூன் சுக் இயோலை பதவிநீக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது; இதையடுத்து, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு தென் கொரிய நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. யூனுக்கு, கிரிமினல் வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான அதிபர் சிறப்புரிமை உள்ளது என்றாலும், ஆனால் அது கிளர்ச்சி அல்லது தேசத்துரோக குற்றச்சாட்டுகளுக்கு பொருந்தாது.

யூன் சுக் இயோல் வழக்கறிஞர் யூன் கப்-கியூன் கூறியதாவது: ‘கைது வாரன்ட் சட்டவிரோதமானது. இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்வோம்’ என்றார்.அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமராக இருந்த ஹான் டக், தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரும் கடந்த வாரம் பார்லிமென்ட் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது தற்காலிக அதிபராக நிதியமைச்சர் சோய் சங் மக் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Prayer Times