காத்மாண்டு : நேபாளத்தில் நடந்த விமான விபத்தில், விமானி உயிர் தப்பியது எப்படி என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன.நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போகரா நகரத்துக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. பராமரிப்பு பணிக்காக சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது.இதில், ஒரு குழந்தை உட்பட 18 பேர் பலியாகினர்.
இரு விமானிகளில் ஒருவரான மனீஷ் சக்யா மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மூளையில் காயம் ஏற்பட்ட நிலையில், காத்மாண்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானி மட்டும் உயிர் தப்பியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ராம் தத் ஜோஷி கூறியதாவது:
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, ஓடுதளம் அருகே தாழ்வாக பறந்தது. அப்போது, விமானத்தின் காக்பிட்டின் ஒரு பகுதி அங்கிருந்த கன்டெய்னரில் மோதியது. அப்பகுதி மட்டும் துண்டாகி தனியாக விழுந்தது. உடைந்த காக்பிட் பகுதியில், விமானி மனீஷ் மட்டும் இருந்தார். கீழே விழுந்த மற்ற பகுதியில் இருந்த அனைவரும் தீயில் கருகி பலியாகினர். மனீஷ் இருந்த பகுதி தனியாக விழுந்ததாலேயே அவர் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விபத்து குறித்து விசாரணை நடத்த முன்னாள் விமான போக்குவரத்து துறை இயக்குனர் ரதீஷ் சந்திரலால் சுமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...