Last Updated on: 11th December 2023, 05:40 pm
இந்தோனேசியா நாட்டின் முக்கிய வருவாய் துறைகளில் ஒன்றாகவும் சுற்றுலாத்துறை உள்ளது. இந்நிலையில் அந்நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விசா ஃபிரி என்ட்ரி வழங்க முடிவு செய்துள்ளது இந்தோனேசியா. இதற்காக இந்தோனேசிய சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இலவச நுழைவு விசாக்களை வழங்க முன்மொழிந்துள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இனி விசா இல்லாமல் இந்தோனேசியாவுக்கு செல்ல முடியும். சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் பல மடங்கு வருமானத்தை ஈட்டவும் இந்தோனேசிய அரசு இந்த திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்தோனேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ “தற்போதுள்ள விசா விலக்கு உள்ள நாடுகளைத் தவிர, அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட 20 நாடுகளை அந்நாட்டு அமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, 25 நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவுக்கு அனுமதி அளித்து வருகின்றன. சமீபத்தில் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லா நுழைவுக்கு அனுமதி அளித்தன. கடந்த ஒன்றாம் தேதி மலேசியாவும் இந்த பட்டியலில் இணைந்தது. தற்போது இந்தோனேசியாவும் இந்திய பட்டியலில் இணைந்துள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு இந்தோனேசியாவிற்கு 16 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.