இந்தியாவிலிருந்து நெய், ஊறுகாய், மசாலா பொருட்களை பயணிகள் கொண்டு வரலாமா?

இந்தியாவிலிருந்து நெய், ஊறுகாய், மசாலா பொருட்களை பயணிகள் கொண்டு வரலாமா?

Last Updated on: 11th December 2023, 01:38 pm

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்யும் பயணிகள் சில பொருட்களை விமானங்களில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது பற்றி அறிந்திராத பயணிகள் சிலரின் லக்கேஜ்களில் அனுமதிக்கப்படாத பொருட்களை கொண்டு செல்வதை விமான நிலைய ஊழியர்கள் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் (CSMIA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் சரிபார்க்கப்பட்ட லக்கேஜ்களில் இருந்து மட்டும் 943 உலர் தேங்காய்களை கைப்பற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சரிபார்க்கப்பட்ட சாமான்களில் உலர்ந்த தேங்காய், நெய், ஊறுகாய், எண்ணெய் உணவு பொருட்கள் மற்றும் இ-சிகரெட்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் அடிக்கடி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாம் கொண்டு செல்லும் ஹேண்ட் லக்கேஜ், செக்டு-இன் லக்கேஜ் அல்லது இரண்டிலும் அந்த பொருள் அனுமதிக்கப்படவில்லையா? அல்லது எந்த ஆணையம் இதுபற்றிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். எனவே, எந்தப் பொருட்களைப் பயணிகள் எடுத்துச் செல்லலாம் அல்லது எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான விவரம் இங்கே உள்ளது.

உலர்ந்த தேங்காய்:

உலர் தேங்காயானது, மார்ச் 2022ம் ஆண்டில் இந்திய சிவில் ஏவியேஷனின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அமைப்பால் (Bureau of Civil Aviation Security -BCAS) தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இ-சிகரெட்டுகள்:

BCAS வெளியிட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலின்படி, செக்-இன் அல்லது கையில் எடுத்துச் செல்லும் சாமான்களில் இ-சிகரெட்டுகள் அனுமதிக்கப்படாது.

மசாலாப் பொருட்கள்:

நீங்கள் விமானங்களில் எடுத்துச் செல்லும் சாமான்களில் முழு மசாலாவாகவோ அல்லது தூள் வடிவிலோ மசாலாப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. இருப்பினும், BCAS வழிகாட்டுதல்களின்படி, செக்டு-இன் சாமான்களில் அவை அனுமதிக்கப்படுகின்றன.

நெய்:

நீங்கள் எடுத்துச் செல்லும் லக்கேஜில், நெய் அல்லது தெளிக்கப்பட்ட வெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு வரும்போது, ​​அவை திரவம், ஏரோசோல்கள் மற்றும் ஜெல் (LAGs) ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகளின் கீழ் வருகிறது. எனவே, நெய் போன்ற பொருட்களை 100 மில்லி என்ற அளவில் கொண்டு வர மட்டுமே அனுமதி உண்டு. இருப்பினும், செக்-இன் சாமான்களைப் பொறுத்தவரை, ஒரு பயணி 5 கிலோ வரை நெய்யை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன.

அதேசமயம், சில விமான நிலையங்கள் நெய்யை எடுத்துச் செல்ல உங்களை அனுமதிக்காது என்பதால், நீங்கள் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தால் வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.

ஊறுகாய்:

BCAS பட்டியலின் படி, பயணிகள் எடுத்துச் செல்லும் மற்றும் செக்-இன் லக்கேஜ் இரண்டிலும் மிளகாய் ஊறுகாயைத் தவிர, மற்ற ஊறுகாயை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. இது கையில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

Leave a Comment