மெதுவாக செல்லும் ரயிலுக்கும் மவுசு: சுற்றுலா பயணிகளின் விருப்பம்..!
வெறும் 291 கி.மீ. தொலைவை 8 மணி நேரத்தில் கடக்கும் உலகின் மெதுவாக செல்லும் ரயில் பார்ப்போரை பிரமிக்க வைக்கிறது.!
ரயில் என்றாலே வேகமாக தானே போக வேண்டும். அதிலும் சிக்குபுக்கு என்று காதை பிளக்கும் வகையில் ஒலி எழுப்பியபடி, மரங்களையும், பாறைகளையும் அசுர வேகத்தில் பின்னோக்கி நகர்த்திய படி செல்வதை நாம் பார்த்திருப்போம், பயணித்து இருப்போம். ஆனால், மெதுவாக.. அதிலும் ரொம்ப மெதுவாக, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தபடி செல்ல ரயில் இருந்தால் எப்படி இருக்கும்?
கிளேசியர்
அப்படி ஒரு ஆச்சரிய ரயில் உள்ளது. உலகின் மிக மெதுவாக இயங்கும் ரயில் என்று இதற்கு பெயர். கிளேசியர் எக்ஸ்பிரஸ்… பனிப்பாறை எக்ஸ்பிரஸ் ரயில் என்ற மற்றொரு பெயரிலும் இந்த ரயில் அழைக்கப்படுகிறது. இந்த ரயில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் உள்ள ஆன்டர்மாட் வழியாக செல்கிறது. வழியில், ஜெர்மாட், செயிண்ட் மோரிட்ஸ் ஆகிய 2 பகுதிகளை இணைக்கிறது.
குகைகள்
மொத்தம் 291 கி.மீ. தொலைவை இந்த ரயில், கடக்க கிட்டத்தட்ட 8 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. வழியெங்கும் சுற்றிலும் பனிப்பாறைகள், பள்ளத்தாக்குகள், நீண்ட நெடிய குகைகள், அழகிய கிராமங்கள் என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
291 பாலங்கள்
பயணத்தில் மொத்தம் 291 பாலங்கள், 91 சுரங்கங்களை ரயில் கடந்து செல்வது வேற லெவல் அனுபவம் என்றே சொல்லலாம். வெளிப்புற இயற்கையை உள்ளே இருந்து ரசித்தபடி செல்ல, அழகிய, அகலமான கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சில பெட்டிகளில் இந்த கண்ணாடிகள் ரயிலின் கூரை வரை வடிவமைக்கப்பட்டு உள்ளது கூடுதல் அம்சம்.
ஆண்டு முழுவதும் பயணம்
முதல் தர வசதிகளுடன் கூடிய அழகிய இருக்கைகள், துரித சேவையுடன் கூடிய சுவையான உணவு என ரயிலின் உட்புறம் பார்க்கும் போது, பயணிகளை பிரமிக்க வைக்கிறது. குளிர்காலம், வெயில்காலம் என ஆண்டு முழுவதும் இயங்கும் வகையில் ரயில் சேவை அட்டவணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
பயணிகள் ஆர்வம்
உலகின் மிக மெதுவாக செல்லும் ரயில் என்று பெருமை பெற்ற இந்த ரயிலில் ரம்மியமான, மனதை மயக்கும் இயற்கை காட்சிகள், பனிப்படர்ந்த மலைகள் என இந்த ரயிலில் பயணிக்க விரும்பும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment