“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” – சிஏஏ அமல் குறித்து அமெரிக்கா கருத்து

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

ஆனால் சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகுக்கப்பட்ட சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இது குறித்து, “மார்ச் 11 ஆம் தேதி குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் அறிவிப்பு குறித்த விவரங்களை இந்தியா வெளியிட்டது.

இது எங்களுக்கு கவலையளிக்கிறது. இந்தச் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை அளித்தல் மற்றும் அனைத்து சமூகங்களையும் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவதுதான் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு” என்று தெரிவித்துள்ளார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed