“மர்ம நோய்..” அப்படியே கும்பலாக சரிந்த மாணவிகள்.. ஒரே நேரத்தில் 95 பேருக்கு கால்கள் முடங்கின! பகீர்
நைரோபி: பள்ளியில் படித்த சுமார் 95 மாணவிகளுக்கு திடீரென ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்களின் கால்கள் முடங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் நாம் மருத்துவ அறிவியலில் பல மடங்கு முன்னேறி இருக்கிறோம். இதன் காரணமாகவே சராசரி ஆயுள் கணிசமாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களிலும் மனித ஆயுள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கு மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியே காரணமாகும்.
பகீர் சம்பவம்: அப்படியொரு மிக மோசமான சம்பவம் தான் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் உள்ள செயின்ட் தெரசாஸ் எரேகி பெண்கள் உயர்நிலைப் பள்ளி படிக்கும் 95 மாணவிகளை திடீரென மர்ம நோய் ஒன்று தாக்கியுள்ளது. இதனால் அத்தனை மாணவிகளின் கால்களும் முடங்கியது. அவர்களால் நடக்கவே முடியவில்லையாம்.
இதையடுத்து பள்ளிக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நோய்க்கான சரியான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. கென்யா இது குறித்துத் தொடர்ந்து விசாரிக்கிறது. கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள 95 மாணவிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கால்கள் முடக்கின: இதனால் அந்த பள்ளிச் சிறுமிகளால் நடக்கக் கூட முடியவில்லை. அவர்களின் கால்கள் செயலிழந்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு வலிப்பும் ஏற்பட்டுள்ளது. எதனால் அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோயின் தீவிர தன்மை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், திடீரென ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்த அந்நாட்டு அரசு விசாரணையில் இறங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் ஆய்வுக்காகக் கென்யா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கே நோயின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரியச் சிகிச்சை தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பகீர் வீடியோ: இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் மாணவிகள் தள்ளாடியபடி நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. முதலில் 80 மாணவிகள் இதனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட நிலையில், பின்னர் இந்த எண்ணிக்கை 95ஆக உயர்ந்துள்ளது.
அங்குள்ள பல மருத்துவமனைகளில் இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட சோதனைகளில் அந்த மாணவிகளின் உடலில் எலக்ட்ரோலைட்கள் அதிகமாக இருப்பது தெரிகிறது. இது அவர்களுக்குத் திரவ இழப்பு ஏற்பட்டதைக் காட்டுகிறது. இந்த மர்மமான நோய்க்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இந்த நோய்ப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது… இது மற்றவர்களுக்குப் பரவுமோ என்பது போன்ற கோணங்களில் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
1 comment