சர்வதேச முக்கிய ரேங்கில்.. ஒரே ஆண்டில் சரிந்த இந்தியா! என்ன காரணம்? ஏன் சரிந்தது தெரியுமா
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் போட்டித்தன்மை தரவரிசையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய சில இடங்களை இழந்துள்ளது.
பல்வேறு துறைகளிலும் இந்தியா இப்போது உலக நாடுகளுடன் போட்டிப் போட்டு வருகிறது. மொபைல் போன் அசம்பளி, செமிகண்டக்டர் துறைகளில் இந்தியா இப்போது கவனம் செலுத்தி வருகிறது. இது இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும்.
சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பு உலகப் போட்டித்தன்மை தரவரிசையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். அதன்படி இந்தாண்டும் உலகப் போட்டித்தன்மை தரவரிசையை இந்தியா வெளியிட்டுள்ளது.
ரேங்கிங்: இந்த ஆண்டுக்கான போட்டித்தன்மை தரவரிசையில் இந்தியா மூன்று இடங்கள் சரிந்து 40வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் இந்தியா, சரிந்த போதிலும், 2019-2021 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா சிறந்த இடத்தில் இருக்கிறது. அந்த ஆண்டுகளில் இந்தியா 43ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகளவில் எந்த நாடுகள் எந்த இடங்களைப் பிடித்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.
டென்மார்க், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.. நெதர்லாந்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து தைவான், ஹாங்காங், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அமீரகம் நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன. கொரோனா பாதிப்பில் இருந்து தாமதமாக விடுபட்ட தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் தரவரிசையில் முன்னேறி இருக்கிறது. அதே நேரத்தில் முன்கூட்டியே விடுபட்ட ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் பின்னடைவைச் சந்தித்தன.
இந்தியா எங்கே: 2023ஆம் ஆண்டில் இந்தியா எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக ஜிடிபி வளர்ச்சியைத் தக்கவைப்பது, நிதிச் சந்தை ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பது, பணவீக்கம் மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது, டிஜிட்டல் மாற்றத்தை விரைவாக்குவது, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஆதாரங்களைத் திரட்டுவது இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மூன்று இடங்கள் சரிந்து 40ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த வீழ்ச்சி ஏற்பட்டாலும், மாறுபட்ட வணிகச் சூழல்களை மதிப்பிடுவதற்கும், சர்வதேச முதலீட்டு முடிவுகளுக்கு உதவவும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாடுகளிலும் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பிடவும் இது ஓரளவுக்கு உதவுகிறது. அதில் இந்தியா 40ஆவது இடத்தில் இருப்பது நல்ல அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
ஏன் முக்கியம்: 1989ஆம் ஆண்டு முதல் இந்த உலகப் போட்டித்தன்மை ரேங்கிங் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து இந்த ரேங்கிங் உருவாக்கப்பட்டு வருகிறது. நீண்ட கால வளர்ச்சிக்காக உலக நாடுகள் எப்படிச் செயல்படுகிறது என்பதை மனதில் வைத்து இந்த ரேங்கிங் உருவாக்கப்படுகிறது.
இந்த தரவரிசையில் இந்தியா சரிந்துள்ள நிலையில், எந்த இடங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வணிக திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் உலக அளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கொரோனா முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போது தான் பொருளாதாரம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.
Post Comment