காலவோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவரும் காசோலைகள்
சிங்கப்பூரில் காசோலைகளைப் பயன்படுத்தும் வழக்கம் விரைவில் மறையக்கூடும்.
நிறுவனங்கள் 2025ஆம் ஆண்டிறுதிக்குள் காசோலைகள் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்தது.
தனிநபர்கள் சிறிது காலத்துக்குத் தொடர்ந்து காசோலையைப் பயன்படுத்தலாம். அதுவும் பின்னர் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரில் காசோலைகளைப் பயன்படுத்தும் போக்குக் குறைகிறது.
2016ஆம் ஆண்டுக்கும் 2022 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் காசோலைகளின் பயன்பாடு சுமார் 70 விழுக்காடு குறைந்ததாக வாரியம் சொன்னது.
காசோலை… அது என்ன? எப்போது தொடங்கியது?
பணத்தை ரொக்கமாகத் தராமல் தொகை குறிப்பிடப்பட்டிருக்கும் வங்கித் தாள் காசோலை.
அந்தத் தொகை, காசோலையில் கையெழுத்திட்டவரின் வங்கிக் கணக்கிலிருந்து அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
பழங்காலத்தில் வர்த்தகப் பரிவர்த்தனைகளில் வெள்ளி, தங்கம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. அவற்றைத் தவிர்க்க விரும்பிய வணிகர்கள் காசோலைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது 15ஆம் நூற்றாண்டிலிருந்து காசோலைகளின் பயன்பாடு கூடியது.
குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அதன் பயன்பாடு உச்சியைத் தொட்டது. அது வழக்கமான கட்டணமுறையாகப் பயன்படுத்தப்பட்டது.
தற்போது அதிகமானோர் மின்னிலக்கக் கட்டணமுறையைப் பயன்படுத்தும் நிலையில் காசோலைகளின் புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது.
4 comments