கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்.. பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி பொதுத்தேர்தல்.. அறிவிப்பு வெளியானது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பிப்ரவரியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பணவீக்கமும், அரசியல் குழப்பங்களும் தலைதூக்கியிருக்கின்றன. முன்னாள் பிரதமர் இம்ரான் தலைமையிலான அரசு இதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராத நிலையில், நாடு முழுவதும் குழப்பங்களும், வன்முறைகளும் வெடித்தன. இப்படி இருக்கையில்தான் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளம் மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரத்தையே சூழித்து போட்டுவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட இந்த வெள்ளம் சுமார் 1,739 பேரை கொன்று போட்டது. அதேபோல ரூ.1.2 லட்சம் கோடி அளவுக்கு பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியது. இதன் பின்னர் பாகிஸ்தான் மெல்ல இலங்கையை போல மாற தொடங்கியது. பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ.300 என விற்கப்பட்டது. வர்த்தகம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள அதிபராக இருந்த இம்ரான் கான் அரசு பணத்தை முறைகேடாக செலவு செய்ததாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குழப்பம் போதாது என, அரசியல் குழப்பமும் பாகிஸ்தான் தொற்றிக்கொள்ள உலக நாடுகள் அதன் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கின.
இப்படி இருக்கையில் இம்ரான் கானுக்கு அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்தார். இப்படி கலைக்கப்பட்டால் அடுத்த 90 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதுவரை காபந்து அரசு இருக்கும். தற்போது காபந்து அரசை வழிநடத்த அந்நாட்டின் எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்ட நிலையில் தற்போதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.இது குறித்து அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் முறையிட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காசி ஃபேஸ் இசா, “அனைவரும் தேர்தலை விரும்புகின்றனர். தேர்தல் எப்போது நடத்தப்படும்?” என்று கேள்வி எழுப்பி அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்று அந்நாட்டின் மத்திய அரசு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் தேர்தல் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஜனவரி மாதம் 29ம் தேதிக்குள் தொகுதிகளை வரைதல் செயல்முறை முடிவடைந்து விடும் என்றும் எனவே பிப்ரவரியில் தேர்தல் நிச்சயமாக நடந்துவிடும் எனவும் தேர்தல் ஆணையத்தின் ஆலோசகர் சஜீல் ஸ்வாதி உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஆனால் எதிர் தரப்பில் இம்ரான்கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் (பிடிஐ) வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நவம்பர் 6ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பிடிஐ சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் தேர்தல் தேதியை நிர்ணயிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே இருப்பதாக ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
4 comments