ஒர்க் பிரம் ஹோம் வேலை.. எந்த நாடுகள் பெஸ்ட்? டாப் 10இல் இருக்கும் ஆச்சரியம்! இந்தியாவுக்கு எந்த இடம்
சர்வதேச அளவில் ஒர்க் பிரம் ஹோம் முறையில் வேலை செய்ய எந்த நாடுகள் பெஸ்ட் என்பதை விளக்கும் வகையில் புதிய ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா எங்கே இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
கொரோனா பரவல் சமயத்தில் அனைவரும் வீடுகளிலேயே முடங்க வேண்டிச் சூழல் ஏற்பட்டது. யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என அரசு உத்தரவிட்டது. அந்த நேரத்தில் டிரெண்டான ஒரு விஷயம் தான் ஒர்க் பிரம் ஹோம். இது நாம் வேலை செய்யும் முறையை உலகெங்கும் மிகப் பெரியளவில் மாற்றியது.
அதுவரை வீட்டில் இருந்து வேலை செய்யும் இந்த ஒர்க் பிரம் ஹோம் நடைமுறையில் யாருக்குமே அனுபவம் இருந்தது இல்லை. வீடுகளில் இருந்து வேலை செய்தால் அதே பர்பாமென்ஸ் கிடைக்குமா என்பதில் ஆரம்பித்து பல்வேறு கேள்விகள் ஆரம்பத்தில் எழுந்தது.
ஒர்க் பிரம் ஹோம்: இருப்பினும், பல துறைகளும் ஒர்க் பர்ம் ஹோம் முறைக்கு வெற்றிகரமாக மாறின. இவை கொரோனா காலகட்டத்தில் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த உதவியது. குறிப்பாகப் பெண்களுக்கு இது மிகப் பெரியளவில் உதவியது என்றே சொல்லலாம். வீட்டு வேலைகளைச் சமாளித்துவிட்டு ஆபீசுக்கு செல்வது பெண்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்த நிலையில், அதைச் சமாளிக்க ஒர்க் பிரம் ஹோம் பெண்களுக்கு மிகப் பெரியளவில் உதவியுள்ளது.இதற்கிடையே நார்ட் லேயர் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் ஒர்க் பர்ம் ஹோம் வேலை செய்வதில் எந்த நிறுவனம் சிறந்த ஒன்று என்பது குறித்த குளோபல் ரிமோட் ஒர்க் இன்டெக்ஸ் என்ற ரேங்கிங்கை வெளியிட்டிருந்தது. ஆன்லைன் பாதுகாப்பு, பொருளாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு என 4 விஷயங்களை முக்கியமாகக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்த ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது. இரண்டாவது ஆண்டாக இந்த ரேங்க் வெளியிடப்படுகிறது.
டாப் நாடுகள்: வழக்கமாக ஐரோப்பிய நாடுகள் தான் இதுபோன்ற ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும். இந்த முறையும் அதில் விதிவிலக்கு இல்லை. சொல்லப்போனால் டாப் 10இல் இருக்கும் அனைத்து நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் என்பது கவனிக்கத்தக்கது. சர்வதேச அளவில் பார்க்கும் போது ஐரோப்பிய நாடான டென்மார்க் இதில் முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல நெதர்லாந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் 3, 4ஆவது இடங்களில் இருக்கிறது.அதேபோல போர்ச்சுகல் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நிலையில், எஸ்டோனியா, லிதுவேனியா, அயர்லாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளது. மொத்தமாக டாப் 20 இடங்களில் 17 ஐரோப்பிய நாடுகள் இடம் பிடித்துள்ளது. இது ஐரோப்பிய நாடுகள் தொழில்நுட்பத்தில் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது. அங்கே ஒர்க் பர்ம் ஹோம் செய்வது எந்தளவுக்கு ஈஸி என்பதையே இது காட்டுகிறது.
அமெரிக்கா, கனடா: பின்லாந்து, பெல்ஜியம், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் 11 முதல் 13 இடங்களைப் பிடித்துள்ளது. இதில் ஐரோப்பியாவுக்கு வெளியே இடம்பெற்ற முதல் நாடாகக் கனடா இருக்கிறது. அவர்கள் 14ஆவது இடத்தில் உள்ளனர். அதேபோல உலக வல்லரசான அமெரிக்கா இதில் 16ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், தென் கொரியா 17ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும், ஜப்பான் 22ஆவது இடத்திலும் ஆஸ்திரேலியா 25ஆவது இடத்திலும் இருக்கிறது.
இந்தியா எங்கே: இந்தியா இந்த லிஸ்டில் 64ஆவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு ரேங்கில் இந்தியா 49ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 15 இடங்களை இழந்துள்ளது. இதில் சமூகப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியா முறையே 74வது மற்றும் 77வது இடங்களில் இருக்கிறது. சைபர் பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதுகாப்பு பிரிவுகளில் இந்தியா 55வது மற்றும் 56வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது அண்டை நாடுகளான சீனா இந்த லிஸ்டில் 39ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், நேபாளம் 89ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 93ஆவது இடத்திலும் இருக்கிறது.
6 comments