Last Updated on: 13th January 2024, 09:48 pm
நாம் நம் உணவுகளை உடனுக்குடன் தயாரித்து உண்பதில் கிடைக்கும் நன்மைகளைவிட, சில உணவுகளின் மூலப்பொருளை ஊறவைத்து அரைத்தோ அல்லது பிசைந்து வைத்து குறிப்பிட்ட நேரம் சென்றபின் சமைத்து சாப்பிடும்போது அதிகளவு ஆரோக்கியம் கிடைக்கும். நடைமுறையில் அவ்வாறு நொதிக்கச்செய்து (fermented) நாம் உண்டுவரும் சில உணவுகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் பெறும் கூடுதல் நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.பாலில் சிறிதளவு மோர் சேர்த்து வைத்தால் ஆறேழு மணி நேரத்தில் அது சுவையான தயிராகிவிடும். தயிர் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நல்ல முறையில் இயங்கச் செய்கிறது.
நாம் உண்ணும் இட்லி, தோசைகளில் உள்ள ப்ரோபயோடிக்ஸ் எனப்படும் நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகளானது நம் குடலுக்குள் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிவதோடு ஜீரண உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.டோக்ளா (Dhokla) செய்வதற்கு அதன் மூலப்பொருளை நொதிக்கச் செய்யும் செயல்பாட்டில் உயிர்த்தன்மை பெறும் நுண்ணுயிரிகள் ஜீரண மண்டலத்திற்குள் சென்று குடலுக்குள் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரியும்.கஞ்சி (Kanji) எனப்படும் ஒரு வகை பானம் சுடுநீரில் கேரட் துண்டுகளை வெட்டி சேர்த்து அதனுடன் சில ஸ்பைசஸ்களை அரைத்துக் கலந்து மூன்று நான்கு நாட்கள் வெயிலில் வைத்து நொதிக்கச் செய்து அருந்தப்படுவது. இது நல்ல செரிமானத்துக்கு உதவி புரியவும், ஜீரண மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கிறது. வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுவது.ஹவைஜார் (Hawaijar) என்பது நொதிக்கச் செய்த சோய் பீன். ஆரோக்கியம் நிறைந்தது; நல்ல செரிமானத்துக்கு உதவுவது; நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யக் கூடியது.என்டூரி பைத்தா (Enduri Pitha) என்பது ஒரிசாவில் உண்ணப்படும் உணவு. அரிசி, உளுந்து சேர்த்து அரைத்து நொதிக்க செய்த மாவை மஞ்சள் இலையில் வைத்து வேகவைப்பது. கரையும் நார்ச்சத்து நிறைந்தது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நல்ல செரிமானத்துக்கும் உதவுவது.
நொதிக்க வைத்த அரிசி மாவிலிருந்து தயாரிக்கப்படுவது செல் ரொட்டி (Sel Roti). சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளில் உண்ணப்படுவது. ஜீரணமாகக்கூடிய புரோட்டீன்களை உற்பத்தி செய்யக்கூடியது.சார்க்ராட் (Sauerkraut) என்பது முட்டைகோஸுடன் உப்பு சேர்த்து நொதிக்கச் செய்த உணவாகும். புளிப்புடன் கூடிய தனித்துவமான சுவையும் அதிக சத்துக்களும் கொண்டது. வைட்டமின் K மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நல்ல செரிமானத்துக்கும் உதவுகிறது.கிம்ச்சி (Kimchi) என்பது நாபா முட்டைக் கோசுடன் இஞ்சி, பூண்டு மற்றும் சில காய் சேர்த்து நொதிக்கச் செய்து தயாரிக்கப்படும் ஒரு கொரியன் சைட் டிஷ் ஆகும். இது பலவித ஆரோக்கிய நன்மைகள் தருவதுடன், கேன்சரை எதிர்த்துப் போராடும் குணமும் கொண்டது.