Last Updated on: 24th March 2024, 10:40 pm
நாம் சாப்பிடும் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுகள் மூலம் உயிர் சத்துக்கள், உப்பு சத்துக்கள், புரதச் சத்துக்கள், கொழுப்பு சத்துக்கள் போன்றவை நம் இளமையை காத்து உடல்நலத்தைப் பேண உதவுகிறது. ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகின்றன. அதற்குத் தேவையான சத்துக்கள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வைட்டமின் ஏ: வைட்டமின் ஏ மாலைக்கண் நோய் வராமல் தடுப்பதோடு, உடல் செல்களை புதுப்பிக்கிறது. சருமத்தைக் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. இது கிடைக்கும் பொருட்கள் பால், தயிர், வெண்ணை, நெய், பப்பாளி, கீரைகள், மஞ்சள் நிற காய்கள், மீன் எண்ணெய், ஈரல் ஆகியவை ஆகும்.
வைட்டமின் பி 1 தயாமின்: இது ஜீரணத்துக்கு பெரிதும் உதவுகிறது. நரம்பு மண்டலத்தைக் காக்கிறது. வைட்டமின் பி1 தயாமின் கிடைக்கும் பொருள் பருப்புகள், பயிறு வகைகள், முளைகட்டிய தானியங்கள், புழுங்கல் அரிசி, முட்டை, ஈரல் முதலியவையாகும்.
வைட்டமின் பி2: பால் பொருட்கள், பாலாடைக் கட்டி, முழு தானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், முட்டைகள் ஆகியவற்றிலிருந்து வைட்டமின் பி2 கிடைக்கின்றது. இதனால் வாய்ப்புண் வராது. சருமத்தில் வெடிப்பு வராமல் தடுக்கும். பார்வை தெளிவாக இருக்கும்.
வைட்டமின் சி: கொய்யாப்பழம், நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, மாம்பழம், தக்காளி, முளைகட்டிய பயிறுகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. காயத்தை விரைவில் ஆற்றுவது, எலும்பு முறிவை குணமாக்குவது, நோய் தொற்றைத் தடுப்பது, இரத்த நாளங்களை வலுப்படுத்துவது போன்றவை வைட்டமின் சி தரும் பயன்களாகும்.
வைட்டமின் டி: சூரிய ஒளி, பால், முட்டையின் மஞ்சள் கரு, நெய், பாலாடைக் கட்டி, மீன் எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் டி உள்ளது. இதனால் உடலில் சுண்ணாம்பு சத்து அதிகரிக்கும். பற்கள் வலுப்பெறும். குழந்தை பிறந்த பிறகு தினமும் காலை இளம்வெயிலில் காண்பிப்பதால் குழந்தையின் எலும்பு வலுப்பெறும்.
வைட்டமின் இ: முளைவிட்ட கோதுமை, எண்ணெய், பருத்திக்கொட்டை போன்றவற்றில் வைட்டமின் இ உள்ளது. இதனால் இரத்த சிவப்பு அணுக்களின் ஆயுளை அதிகரிக்கும். இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
வைட்டமின் கே: முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரைகள், கோதுமை, சோயா, முட்டையின் மஞ்சள் கரு, மீன் போன்றவற்றில் வைட்டமின் கே உள்ளது. இரத்தம் உறைதலுக்கு அவசியம் இந்த சத்து தேவையாகும்.
கால்சியம்: பால் பொருட்கள், கீரைகள், பீன்ஸ், முட்டை, பட்டாணி, பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றில் கல்சியம் சத்து உள்ளது. இதனால் எலும்பு, பற்கள் வலுவடையும். தசைகள் இயல்பாக இயங்க இந்த சத்து அவசியம். முதியோருக்கு இது மிகவும் அவசியம்.
இரும்புச் சத்து: சுண்டைக்காய், கீரைகள், முழுதானியங்கள், பேரீச்சை, வெல்லம், புளி, முட்டை, ஈரல் போன்றவற்றில் இது உள்ளது. இது இரத்த சோகை வராமல் தடுக்கும் உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கும். இரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும்.
மாவுச் சத்து: உணவு தானியங்கள், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் மாவுச் சத்து உள்ளது. இது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
புரதச்சத்து: பால், பாலாடைக் கட்டி, எண்ணெய் வித்துக்கள், சோயா பீன்ஸ், முட்டை, மீன், இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து உள்ளது. இது உடலின் நோய் தொற்றை எதிர்க்க உதவும். வெள்ளை அணுக்கள் உருவாக்கப் பயன்படும்.
கொழுப்புச்சத்து: வெண்ணைய், நெய், முட்டை மஞ்சள் கரு, மீன், ஈரல், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் கொழுப்புச்சத்து உள்ளது. இதனால் இரத்தம், தசை நார்களை வலுப்படுத்தும். ஆற்றலை அதிகரிக்கும். உயிர்ச் சத்துக்கள் கரைய உதவும்.
அயோடின்: அயோடின் கலந்த உப்பை தினமும் பயன்படுத்த வேண்டும். இச்சத்து அனைத்து காய்கறிகளிலும் உள்ளது. இது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். கழுத்துக் கழலை நோய் வராமல் தடுக்கும். தைராய்டு சுரப்பிகள் சரிவர இயங்க உதவும்.மேற்கூறிய அனைத்து வைட்டமின்கள் மற்றும் சத்துப் பொருட்களை எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியம் காப்போம்!