Last Updated on: 7th February 2024, 09:46 pm
அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.இந்நிலையில், இந்திய அரசு தலையிட்டு அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஹைதராபாத்தை சேர்ந்த சையது மசாஹிர் அலி, சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.பிப்ரவரி 4 அன்று, அவரது வெஸ்ட் ரிட்ஜ் குடியிருப்பின் அருகே ஆயுதமேந்திய கொள்ளையர்களால் அவர் தாக்கப்பட்டார்.அலி வீட்டிற்குச் செல்லும் போது நான்கு பேர் தன்னைத் தாக்கியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
“நான் உணவை வாங்கி கொண்டு வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது, நான்கு பேர் என்னை உதைத்து, குத்திவிட்டு, என் தொலைபேசியுடன் ஓடிவிட்டனர். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” என்று அலி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.இந்த தாக்குதலில் அலிக்கு பல வெட்டுக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.மற்றொரு சிசிடிவி வீடியோவில், தாக்குதல்காரர்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொள்ள அலி தெருவில் ஓடுவது பதிவாகியுள்ளது.”அவர்கள் என் கண்ணில் குத்தினார்கள். அவர்கள் என் முகத்தில், என் விலா எலும்பில், என் முதுகில் கால்களால் உதைத்தார்கள்,” என்று அலி வைரலாகும் வீடியோவில் கூறியுள்ளார்.ஹைதராபாத்தில் உள்ள அலியின் மனைவி மற்றும் மூன்று மைனர் குழந்தைகள் அடங்கிய அவரது குடும்பம் அவரது நலன் குறித்த ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.
சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை:
அவரது மனைவி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு, அமெரிக்கா செல்ல உதவி கோரியுள்ளார்.சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அலி மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்ய உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “இந்தியாவில் உள்ள சையத் மசாஹிர் அலி மற்றும் அவரது மனைவி சையது ருக்கியா பாத்திமா ரஸ்வி ஆகியோருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் அதிகாரிகளையும் துணைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.