6 C
Munich
Saturday, September 14, 2024

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

பாகிஸ்தான் தேர்தல்: நாடு முழுவதும் மொபைல் சேவை துண்டிப்பு

Last Updated on: 8th February 2024, 07:19 pm

கராச்சி: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (பிப்.8) தொடங்கியது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்புகள் என பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று (பிப்.08) பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது

இன்று காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 12 கோடியே 85 லட்சத்து 85 ஆயிரத்து 760 பேர் வாக்களிக்க உள்ளதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் 65,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில், அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தபால் வழியில் தனது வாக்கை செலுத்தினார்.

சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இன்று மொபைல் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று மதியம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் நகரில் சுயேச்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து கிலா சைபுல்லா நகரில் ஜேயுஐ – எஃப் கட்சி அலுவலகத்துக்கு வெளியேயும் குண்டுவெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்ததுடன் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்பில் மொத்தமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர். 40-க்குமேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேர்தல் நாளுக்கு முன்தினம் நடந்த இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here