அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய உரிமையாளரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்..!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஒருவர், வளர்ப்பு நாய் உதவியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.அமெரிக்காவின் ஒரேகான் நகரைச் சேர்ந்த பிராண்டன் காரேட் என்பவர், தனது காரில் நான்கு நாய்களுடன் வனத்துறை பராமரிக்கும் சாலையில் கடந்த 2ம் தேதி பயணித்தார்.
அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அதில் இருந்த நாய் ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், காரில் இருந்து வெளியேறியது.
தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து நான்கு மைல் தொலைவில் உள்ள வீட்டிற்கு சென்றது. நாய் தனியாக வருவதை பார்த்த குடும்பத்தினர், ஏதோ தவறு நடந்துள்ளது தெரிந்தது. உடனடியாக அவர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து, பிராண்டன் சென்ற வழியில் சென்று அவரை தேடத் துவங்கினர்.மறுநாள் காலை காரை மட்டும் கண்டுபிடித்த அவர்கள், பிராண்டனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து போலீஸ் உதவியை அவர்கள் நாடினர். போலீசார் வந்து தேடியதில், காரில் இருந்து சில அடி தூரத்தில் பிராண்டன் இருப்பதை கண்டுபிடித்தனர்.
வனத்துறையினர் வந்து பாதையை ஏற்படுத்தி கொடுக்க, போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த மற்ற 3 நாய்களும் அந்த இடத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
6 comments