சீனா | உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 31 பேர் பலி; பலர் காயம்

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து சினுவா செய்தி நிறுவனம், “சீனாவின் யின்சுவான் நகரில் புதன்கிழமை இரவு உணவகம் ஒன்றில் வாயு கசிந்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உணவகத்தில் டிராகன் திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதில் 31 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பள்ளி மாணவர்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்து தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உரிய நேரத்தில் மீட்புப் பணிகள் நடந்தாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி ஜின்பிங் கூறும்போது, “காயமடைந்தவர்களை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதியளிக்கவும், விபத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறியவும், சட்டத்தின்படி பொறுப்பை தீவிரமாக மேற்கொள்ளவும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.சீன நாட்டில் அண்மையில் ஏற்பட்ட மோசமான விபத்தாக இது கருதப்படுகிறது.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed