Last Updated on: 18th October 2023, 05:22 pm
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையானது எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் மற்றும் உபகரணங்களின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகளை குறைத்து கொண்டே வருவதால், ஷாப்பிங் செய்பவர்கள் மலிவு விலையில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்க முடியும் என்று சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை அதிகரித்த போதிலும் கூட, முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரிக்காமல் நிலையாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். மேலும் இது நாட்டில் பணவீக்கம் குறைகிறது என்பதற்கான ஒரு குறிகாட்டியாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 15 மாடல்களின் விலைகள் அமீரகத்தில் நிலையாக இருந்ததாகவும், இது பயனர்களை புதிய மொபைல் வாங்க உந்துவதாகவும் சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். மேலும், ஸ்மார்ட் போன்களுக்கான தேவை குறைந்து அதிக விநியோகம் இருக்கும் போது சாதனங்களின் விலையில் அது வீழ்ச்சியை உருவாக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்நுட்ப சந்தையானது தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற தள்ளுபடி விற்பனை மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஐபோன் 14 பங்குகளை வைத்திருக்கும் சில்லறை விற்பனையாளர்கள் ப்ரோமோஷன்களில் அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றனர். மேலும் இது அடுத்த மாதம் வரும் ‘Black Friday’ புரொமோஷனிலும் எதிரொலிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆகையால், ஐபோன் 14 மாடல்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய சலுகை அறிவிக்கப்படுவதும், இதன் விளைவாக அமீரகத்தில் தொடர்ச்சியாக மற்ற போட்டி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களின் விலையிலும் சரிவு ஏற்படுவதாகவும் சில்லறை விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.