மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர் எண்ணிக்கை 33% குறைந்தது

Last Updated on: 9th March 2024, 11:15 am

மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 33 சதவீதம் குறைந்துள்ளது.மாலத்தீவு தலைநகர் மாலேவில் இருந்து ‘அதாது’ என்ற ஆன்லைன் செய்தி சேனல் செயல்படுகிறது. இந்த சேனல் வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வருகை தந்தனர். 2024, மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27,224 ஆக, அதாவது 33 சதவீதம் குறைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தியர்களை லட்சத்தீவுகள் செல்லுமாறு இந்திய அரசு ஊக்குவிப்பது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் மாலத்தீவின் சிறந்த சுற்றுலா சந்தையாக இந்தியா இருந்தது. ஆண்டுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சுற்றுலா சென்று வந்தனர்.

மாலத்தீவு சுற்றுலா சந்தையில் இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தியா – மாலத்தீவுகள் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டதால் இந்தியா 6 சதவீத பங்குடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாலத்தீவு செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ள அதேவேளையில் அங்கு செல்லும் சீனர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. சீனா – மாலத்தீவுகள் இடையே உறவுகள் வலுப்பட்டதால் 2024-ல் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் அங்கு சுற்றுலா சென்றுள்னர்.

இதனால் மாலத்தீவுக்கு வரும்சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் இப்போது சீனர்கள் முதலிடத்தில் உள்ளனர். கடந்த பிப்ரவரியில் மாலத்தீவுகளுக்கு 2,17,394 பேர் சுற்றுலா வந்தனர். இவர்களில் 34,600-க்கும் மேற்பட்டோர் சீனாவில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

பிரதமர் நரேந்திர மோடி சிலமாதங்களுக்கு முன் லட்சத்தீவு சென்றார். அங்குள்ள அழகியகடற்கரையில் தாம் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டிருந்தார்.இதை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்தது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியர்கள் பலர் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்தனர்.

சீன ஆதரவு தலைவரான முகம்மது மூயிஸ், மாலத்தீவுகள் அதிபரான பிறகு இந்தியா- மாலத்தீவுகள் இடையிலான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment