வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ.. 5 பேர் பலி.. இந்தியர்களும் பயணித்தார்களா? ஷாக் தகவல்

வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ.. 5 பேர் பலி.. இந்தியர்களும் பயணித்தார்களா? ஷாக் தகவல்

Last Updated on: 6th January 2024, 11:50 am

வங்காளதேசத்தில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். தீ பிடித்து எரிந்த ரயிலில் இந்தியர்களும் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்காளதேசம். அந்நாட்டில் வரும் 27 ஆம் தேதி தேசிய தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம், தலைவர்களின் கூட்டம் என அந்த நாடு மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.

எனினும், தேர்தலை புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான பங்காளதேஷ் தேசிய கட்சி அறிவித்துள்ளது. இதனால், பிரதமர் ஷேக் ஹசீனாவே மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலை புறக்கணிப்பதாக தேசிய கட்சி அறிவித்துள்ளதால் அங்கு அமைதியின்மை நிலவுகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தான் அங்கு பயணிகள் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரில் இருந்து தலைநகர் நோக்கி பெனபோலே எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலில் தீடிரென 4 பெட்டிகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியில் தீ பிடித்ததை பார்த்ததை அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகள் பலரையும் மீட்டுள்ளனர். இந்த ரயிலில் இந்தியர்களும் பயணித்ததாக வங்காளதேசத்தில் உள்ள Somoy TV செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அந்த கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக கடந்த மாதமும் இதேபோன்ற ஒரு ரயில் தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இதில் 4 பேர் பலியாகியிருந்தனர். ரயிலில் தீ பிடித்து உயிரிழப்புகள் ஏற்பட எதிர்க்கட்சியான பி.என்.பியே காரணம் என்று அரசும் போலீஸ் தரப்பும் குற்றம் சாட்டியது. எனினும், இதை எதிர்க்கட்சியான பி.என்.பி திட்டவட்டமாக மறுத்தது. எதிர்க்கட்சிகளை ஒடுக்க அரசின் சாக்குபோக்கு இது எனவும் கூறியது.

Leave a Comment