16.9 C
Munich
Tuesday, September 10, 2024

சர்வதேச போட்டியில் வெற்றி.. பரிசுத்தொகையை பாலஸ்தீனத்திற்கு கண்ணீருடன் சமர்பித்த டென்னிஸ் வீராங்கனை

Must read

Last Updated on: 4th November 2023, 11:42 am

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்திருக்கிறது. இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை கொடுப்பதாக துனிசியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபியர் அறிவித்துள்ளார்.

எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது என்று சொல்வதுண்டு. ஆனால் எல்லையே இல்லாமல் இன்னும் பல போர்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் முக்கியமானது இஸ்ரேல்-பாலஸ்தீன போர். இஸ்ரேலில் இருப்பவர்கள் யூதர்கள். பாலஸ்தீனத்தில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது.

எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.

ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது.

அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இதில் தற்போது வரை 9 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சோகம் என்னவெனில் கொல்லப்பட்டவர்களில் பாதிக்கு பாதி, பெண்களும், குழந்தைகளும்தான்.

இந்த கொடூரத்தை எதிர்த்து உலகமே குரல்கொடுக்க தொடங்கியுள்ளது. பஞ்சாயத்துகளை அப்புறம் பேசிக்கொள்ளலாம் முதலில் போரை நிறுத்துங்கள் என்பதே இப்போதைய கோரிக்கை. இப்படி இருக்கையில் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு தனது பரிசு தொகையில் ஒரு பாதியை கொடுக்க துனிசியா நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஓன்ஸ் ஜபியர் முன்வந்திருக்கிறார்.

மகளிர் டென்னிஸ் சங்க டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவை வென்ற பின்னர் பேட்டியளித்த அவர் இதை கூறியுள்ளார். அதாவது, “வெற்றியில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நான் சமீபத்தில் மகிழ்ச்சியாக இல்லை. உலகின் தற்போதைய சூழல்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை. பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு நாளும் குழந்தைகளும், சிறுவர்களும் உயிரிழப்பதை பார்ப்பது கடினமாக இருக்கிறது.

இது என் இதயத்தை உடைத்துவிட்டது. நான் என்னுடைய பரிசு தொகையில் ஒரு பாதியை பாலஸ்தீனத்திற்கு வழங்க முடிவெடுத்துள்ளேன். இது அரசியல் செய்தியல்ல. இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். எனக்கு அதுதான் வேண்டும்” என்று கண்ணீர் விட்டவாறு கூறியுள்ளார்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article