Last Updated on: 10th September 2023, 09:06 am
காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிறிய அளவில் காயமடைந்து உயிர் தப்பியுள்ளனர்.நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர், போலீஸார், தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு, பகலாக அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகேஷ் பகுதி வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாயின.
ரபாத் முதல் காசாபிளாங்கா நகரம் வரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்பு இருப்பதால் எங்கெங்கும் மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.