Last Updated on: 20th June 2023, 11:34 am
ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்து சம்பாதிக்க விரும்புகிறீர்களா..?? அதேசமயம், இரண்டு முதலாளிகளிடம் பணிபுரிந்தால், சேவையின் இறுதிப் பலன்கள் (end-of-service benefits) மற்றும் பணிக்கொடை கணக்கீடுகள் (gratuity calculations) எவ்வாறு கிடைக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறதா..?? உங்களது குழப்பத்திற்கு தெளிவான விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண். 1 இன் பிரிவு 6 (1) (f) இன் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஊழியர் பகுதி நேர அடிப்படையிலான வேலைவாய்ப்பு பெற்று பணியாற்ற முடியும். ஆனால், பிரிவு (6) இன் விதிகளுக்கு உட்பட்டு, பணி அனுமதிகளின் வகைகள் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர வேலை அனுமதி:
அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனம் பகுதி நேர ஒப்பந்தத்தின் கீழ் பணியாளர்களை பணியமர்த்த வேண்டுமெனில், பகுதி நேர வேலைக்கான அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற பிறகு, ஊழியர் ஒன்றுக்கு மேற்பட்ட முதலாளிகளிடம் வேலை செய்யலாம்.
மேலும், ஒரு வருடத்திற்கு மேல் பகுதி நேரப் பணியாளராக ஒரு முதலாளி அல்லது நிறுவனத்திடம் சேவையை முடித்திருந்தால் அவர்கள் கிரேஜூட்டி பெற தகுதி பெறுவார்கள். பொதுவாக ஒரு பகுதி நேர ஊழியரின் வேலை நேரங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பணிக்கொடை (gratuity) கணக்கிடப்படுகிறது. பின்வரும் நெறிமுறைகளின் படி, எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.
1. ஒரு வருடத்திற்கான பணி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி வேலை நேரங்களின் எண்ணிக்கையை, முழு நேர ஒப்பந்தத்தில் உள்ள வேலை நேரங்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, 100 ஆல் பெருக்கப்பட வேண்டும். இது கணக்கிடப்பட வேண்டிய சேவையின் இறுதிப் பலன்களின் சதவீதத்திற்கு சமமாக இருக்கும். பின்னர் இந்த சதவீதத்தை முழு நேர வேலை ஒப்பந்தத்திற்கான சேவைப் பலனின் இறுதி மதிப்பினால் பெருக்க வேண்டும்.
2. அதே சமயம் பகுதிநேர ஊழியர்களின் சேவையானது ஒரு வருடத்திற்கும் குறைவானதாக இருந்தால், அவர்களுக்கு சேவையின் இறுதிப் பலன் பொருந்தாது.
அமீரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பிரிவு 51 இல் குறிப்பிடப்பட்டுள்ள படி, பகுதி நேர ஊழியர்களுக்கான பணிக்கொடை கணக்கீடு, 5 ஆண்டுகளுக்கும் குறைவான தொடர்ச்சியான பணியை முடித்த ஊழியர்களுக்கு 21 நாட்களுக்கான அடிப்படைச் சம்பளம் மற்றும் 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் அடுத்த ஆண்டுகளுக்கான பணிக்கொடையாக 30 நாட்கள் அடிப்படைச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதுபோல, கிரேஜூட்டி தொகையுடன் பகுதி நேரம் பணிபுரியும் ஊழியர் முதலாளியுடன் பணிபுரியும் காலத்தில் அவர் எடுக்காத வருடாந்திர விடுப்புக்குப் பதிலாக ரொக்கத் தொகையைப் பெறலாம். அதாவது, ஒரு பகுதிநேர ஊழியரின் சேவை முடியும் பட்சத்தில், அடிப்படைச் சம்பளத்தின்படி, அவருக்குச் சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டிய வருடாந்திர விடுப்பை பயன்படுத்தவில்லையெனில் அதற்கான ரொக்கக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 29(9) இன் படி, ஒரு ஊழியர் தனது விடுமுறையைப் பயன்படுத்தாமல், அதை பயன்படுத்துவதற்கு முன்பே வேலையை விட்டு வெளியேறினால், அவரது விடுமுறை நாட்களுக்கு ஊதியம் பெற உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.