Last Updated on: 11th May 2023, 12:56 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பிரபலமான மல்டி சர்வீஸ் செயலியான Careem அடுத்த நான்கு வாரங்களில் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர், அதன் மதிப்பிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) விட தாமதமானால், தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 திர்ஹம்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குவதாக அறிவித்துள்ளது.
அதேசமயம், சரியான நேரத்தில் டெலிவரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெலிவரி ரைடர்கள் அதிவேகத்தில் வாகனத்தைச் செலுத்தாமல் தங்கள் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தாமதமான டெலிவரிகளுக்கு அவர்கள் பொறுப்பேற்கவோ, அபராதம் செலுத்தவோ வேண்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து Careem Food இன் உலகளாவிய தலைவர் அலெக்ஸ் கோல்டன் அவர்கள் கூறுகையில், ஆர்டர்களின் தரத்தில் சமரசம் செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாக உணவை வழங்குவதில் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை டெலிவரி செய்வதில் ஆர்டர்களின் தரத்தில் சமரசம் செய்யாமல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாக உணவை வழங்குவதில் தாமதமானால், ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1 திர்ஹம்களை அவர்களுக்கு திருப்பிச் செலுத்த உறுதியளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒவ்வொரு ஆர்டருக்கும் சரியான ரைடரை நியமிப்பதன் மூலமும், டெலிவரி பெறப்படும் முகவரிக்கு அருகில் உள்ள உணவகங்களில் இருந்து விரைவாக ஆர்டர்களை விநியோகிப்பதன் மூலமும் டெலிவரி நேரத்தை மேம்படுத்துவதாகவும் கரீம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தாமதமான ஆர்டர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நேரடியாக வாடிக்கையாளர்களின் கரீம் பே வாலட்டுகளில் திருப்பிச் செலுத்தப்படும் அல்லது வாடிக்கையாளர் வங்கிக் கணக்குகளில் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது எதிர்வரும் ஜூன் 8 வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.