Last Updated on: 9th May 2023, 07:42 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியிருக்கும் நிலையில், நாட்டில் வெப்பநிலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் 40 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமான வெப்பநிலை அமீரகத்தின் சில இடங்களில் பதிவாகி வருகிறது. இருப்பினும் இரவு நேரங்களில் வெப்பநிலை தணிந்து ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் வீசி வருகிறது.
வானிலை குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் இன்று மே 8ம் தேதி வெப்பநிலை 42ºC ஐ தொடும் என்றும், அபுதாபியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் துபாயில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வருடத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக அல் அய்னில் உள்ள கஸ்யூரா (qasyoura) எனும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2:15 மணிக்கு, 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக NCM தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அமீரகத்தில் இன்றும், நாளையும் மூடுபனி உருவாகும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (National Centre of Meteorology- NCM) வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அபுதாபியின் பல பகுதிகளில் இன்று திங்கள்கிழமை அபாயகரமான நிலைமைகளைக் குறிக்கும் வகையில், சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளையும் ஆணையம் வெளியிட்டிருந்தது.
மேலும், மூடுபனி காரணமாக சாலைகளில் பார்வைத்திறன் 1,000 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்றும், குடியிருப்பாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குறைந்த பார்வை மற்றும் வேக வரம்பு மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும் அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அபுதாபியில் மோசமான வானிலையில் சாலைகளின் உள் மற்றும் வெளிப்புற பாதைகளில் வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ வரை குறைக்கப்படும். ஆகையால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம், பகல் நேரங்களில் வானிலை சீராகவும் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டமாகவும் இருக்கும் என்று NCM அறிவித்துள்ளது. அத்துடன் இன்றிரவு மற்றும் செவ்வாய்க்கிழமை காலை நேரங்களில் நாட்டின் சில கடலோரப்பகுதிகளில் ஈரப்பதமான காற்று வீசும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது.