ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அரபி மொழியில் திருக்குறள்!

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் அரபி மொழியில் திருக்குறள்!

Last Updated on: 7th November 2023, 11:20 am

ஷார்ஜாவில் கடந்த புதன்கிழமையன்று ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் (Sharjah International Book Fair-SIBF) 42வது பதிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஷார்ஜாவின் ஆட்சியாளர் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புத்தகக் கண்காட்சி நவம்பர் 12ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதில் பார்வையாளர்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 1.5 மில்லியன் புத்தகங்களை தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

சுமார் 108 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாபெரும் கண்காட்சியில் தமிழ்நாட்டிலிருந்தும் ஏழு புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் சென்னை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செயல்படும் பதிப்பகங்களும் இந்த ஆண்டின் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் தங்களின் புத்தகங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

யுனிவர்சல் பப்ளிஷர்

சென்னையைச் சேர்ந்த யுனிவர்சல் பப்ளிஷர் நிறுவனம் மட்டும் இங்கு எட்டு ஸ்டால்களை அமைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் உரிமையாளர் S.S. சாஜஹான் தெரிவித்துள்ளார். முதன்முதலில் அப்துல் ரஹீம் என்பவரால் 1948இல் நிறுவப்பட்ட இந்நிறுவனம் 75 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த துறையில் இயங்கி வருவதாகவும், இந்த நிறுவனத்தின் கீழ் இன்றுவரையிலும் 1500 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷார்ஜா புத்தக கண்காட்சியில் முதல்முறையாக கடந்த ஆண்டு பங்கேற்ற இந்நிறுவனம், இந்த ஆண்டு, ஊக்கம், கவிதை, இஸ்லாமிய இலக்கியம், குழந்தைகள் புத்தகங்கள் மற்றும் சமையல் போன்ற பாடங்களில் 500 தலைப்புகளில் புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளது. மேலும் இது இஸ்லாமிய புத்தகங்களின் சிறந்த பதிப்பகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

அதேபோல், சென்னையை தளமாகக் கொண்ட சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸின் CEO கார்த்திகேயன் புகழேந்தி அவர்கள், இந்த கண்காட்சியில் இருமொழி குழந்தைகளுக்கான புத்தகம், லியோனார்டோ டா வின்சியின் வாழ்க்கை வரலாறு மற்றும் மருத்துவச்சிகள் பற்றிய புத்தகம் என மூன்று தலைப்புகளை வெளியிட இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிறுவனம் சாகித்ய அகாடமி வெற்றியாளர்களின் புத்தகங்கள் மற்றும் திரைக்கு ஏற்ற நாவல்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மேற்கத்திய கிளாசிக்ஸ் மற்றும் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் என 3000 தலைப்புகளை இந்த ஆண்டு கொண்டு வந்துள்ளது.

நூல் குடில் பதிப்பகம்

அடுத்ததாக, ராம மெய்யப்பன் என்பவர் சென்னையில் தனது மகள் விசாலாக்ஷியுடன் இணைந்து நடத்தும் நூல் குடில் பதிப்பகமும் இந்த ஆண்டு பங்கேற்றுள்ளது. இவர்கள் குழந்தைகளுக்கான புத்தகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் இந்திய வரலாறு பற்றிய புத்தகங்கள் மற்றும் உடல்நலம், உணவு, அழகு மற்றும் கவிதைகள் பற்றிய தொகுதிகள் உட்பட 600 தலைப்புகளை ஷார்ஜா கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்த பதிப்பகம் குழந்தைகளால் எழுதப்பட்ட புத்தகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதுவரையிலும் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் எழுதப்பட்ட 15 தலைப்புகளின் கீழ் புத்தகங்களை இந்த பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

எதிர் வெளியீடு பதிப்பகம்

இந்த கண்காட்சியில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள எதிர் வெளியீடு பதிப்பகமும் அனுஷ் கான் என்பவரின் தலைமையில் முதல் முறையாக இங்கு பங்கேற்றுள்ளது. இந்த கண்காட்சிக்கு Goat Days இன் தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அனுஷ் கான், தமிழில் மால்கம் X வாழ்க்கை வரலாறும், எஸ்.பாலமுருகன் எழுதிய சோலகர் தோட்டி நாவலும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை விருந்தகம்

இந்த வரிசையில், சென்னையைத் தளமாகக்கொண்ட சிந்தனை விருந்தகம் என்ற புத்தக பதிப்பகமும் ஷார்ஜா புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இது தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தமிழ் வரலாறு பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த இடமாகும்.

காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்

கண்காட்சியில் பங்கேற்ற மற்றொரு நிறுவனம் காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகும். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் செயல்படும் இந்நிறுவனம் 600 தலைப்புகளில் இங்கு புத்தகங்களை கொண்டு வந்துள்ளது. இதில் பெருமாள் முருகன் மற்றும் ஜாகீர் உசேனின் கவிதைகள் போன்ற புதிய வெளியீடுகளும் அடங்கும்.

அதிலும் முக்கியமாக, தமிழில் இருந்து நேரடியாக அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வெளியிட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மைதிலி சுந்தரம் என்பவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அமீரகத்தில் வசிக்கும் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஒரு புத்தகத்தை வாங்கினால், தமிழ் பதிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment