Last Updated on: 7th July 2023, 10:48 am
ஓமான் நாட்டின் விமான போக்குவரத்தானது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது, இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஓமான் விமான நிலையங்கள் வழியாகப் பயணித்த மொத்த பயணிகளின் எண்ணிக்கை 81% அதிகரித்து 4,209,846 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,324,007 பயணிகளை விமான நிலையங்கள் கையாண்டது என National Centre for Statistics and information (NCSI) வெளியிட்ட முதல் கட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
மேலும், மஸ்கட் சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 2022 இன் இறுதியில் 1,984,428 ஆக இருந்தது. இந்த வருடம் இந்த எண்ணிக்கையானது 3,792,212 என்று பதிவாகியுள்ளது. இது 91.1% உயர்வைக் குறிக்கிறது.
அது மட்டுமல்லாமல், மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மொத்த விமானங்களின் எண்ணிக்கையும் 78% அதிகரித்து ஏப்ரல் 2023 இன் இறுதியில் 28,939 விமானங்களாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு 16,262 விமான சேவைகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், சலாலா விமான நிலையம் வழியாக பயணித்த பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஒப்பிடும் பொழுது 36.8% அதிகரித்து 390,355 பயணிகளை எட்டி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது விமானங்களின் எண்ணிக்கையும் 30.9% ஆக அதிகரித்துள்ளது.
அடுத்ததாக, சோஹார் விமான நிலையம் வழியாக வந்த 86 விமானங்களில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,669 ஆகவும், துக்ம் விமான நிலையம் வழியாக வந்த 204 விமானங்களில் பயணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,610 ஆகவும் பதிவாகியுள்ளது. கொரோனா நோய் தொற்றிற்கு பிறகு வளைகுடா நாடுகளும் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளும் விமான போக்குவரத்தில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியினை கண்டுள்ளன என்பது பாராட்டத்தக்கதாகும்.