Last Updated on: 8th August 2023, 09:26 am
உலகில் மிகவும் பிசியான விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் துபாய் விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் துபாயில் இருந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. இந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், திடீரென்று விமானத்திற்குள் கரடி ஒன்று புகுந்ததது. இதனால், பயணிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.
விமானத்தில் சரக்குகள் கையாளும் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கரடி தனது கூண்டை உடைத்துக் கொண்டு வெளியேறி பயணிகள் விமானத்திற்குள் புகுந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பயணிகள் விமானத்திற்குள் புகுந்த கரடியை வெளியே கொண்டு வர விமான பணியாளர்கள் முயற்சிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கரடி உள்ளே புகுந்ததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், பயணிகளிடம் விமானி மன்னிப்பு கேட்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து தங்களுக்கே உரிய பாணியில் கமெண்ட் அடித்து வருகிறார்கள். விலங்குகளை கொண்டு செல்வதற்கான உரிய சர்வதேச விதிகளை பின்பற்றியே கரடியை கொண்டு சென்றதாக ஈராக் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரடியை கொண்டு செல்ல இருந்த நபரின் விவரத்தையும் வெளியிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கருத்து எதையும் கூற துபாய் விமான நிலையம் மறுத்துவிட்டது. விமானம் கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றதாக பயணிகள் சிலர் ஆதங்கத்துடன் கூறினர். விமானத்தில் நடந்த வினோத சம்பம் தொடர்பாக விசாரணைக்கு ஈராக் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.