Last Updated on: 10th August 2023, 11:01 am
இந்தியாவில் இருந்து மகனைத் தேடி துபாய்க்கு வந்த குடும்பம் ஒன்று மகனின் மரணச் செய்தியைக் கேட்டு மனம் நொந்து போயுள்ளனர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த மகனை வீட்டிற்கு திரும்பி வரும்படி, அவரின் பெற்றோர் அடிக்கடி கெஞ்சியுள்ளனர். பெற்றோர் பலமுறை அழைத்தும் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக சேவகர் அஷ்ரப் தாமரசேரி என்பவர் கூறுகையில், அந்த நபரின் நிச்சயதார்த்தம் சில காரணங்களால் முறிந்ததால், அவர் சொந்த ஊரில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், அதனால் அமீரகத்திற்கு பயணித்த அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த பெற்றோர், அவரைத் தேடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர முடிவு செய்துள்ளனர். மேலும், மகனைப் பற்றிய குறைந்தபட்ச விவரங்களுடன் அவர்கள் அமீரகத்தில் அவரின் முகவரியைத் தேடி அலைந்துள்ளனர். மகனைத் தேடி பல வீடுகளின் கதவுகளையும் தட்டியுள்ளனர்.
இறுதியாக, நீண்ட நாள் தேடுதலுக்குப் பிறகு, தங்கள் மகன் தங்கியிருந்த இடத்தைத் தேடி கண்டுபிடித்த போது, அவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட பெற்றோர் அதிர்ந்து போயுள்ளனர். அந்த நபர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாலும், யாருடனும் அதிக தொடர்பு இல்லாததாலும், பல நாட்களுக்கு அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து, மகனின் உடலைக் கண்டுபிடிக்க பிணவறைக்கு சென்ற பெற்றோர் அவரது உடலை அடையாளம் காட்டியுள்ளனர்.
இது குறித்து அஷ்ரஃப் கூறுகையில், “அந்த நிமிடம், பெற்றோரின் முகத்தில் இருந்த சோகத்தை என்னால் மறக்கவே முடியாது, இது நான் கையாண்ட வழக்குகளிலேயே மிகவும் மனதை உருக்கும் ஒன்றாகும்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அனைத்து சம்பிரதாயங்களும் முடிக்கப்பட்ட பிறகு, அந்த நபரின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல கனவுகளை எண்ணி வெளிநாடு செல்பவர்களின் ஒரு சிலர் வாழ்வில் இது போல சோக நிகழ்வும் நடக்கிறது என்பது மனதிற்கு மிகவும் வருத்ததைத் தரக்கூடியதாக இருக்கின்றது.