Last Updated on: 28th July 2023, 10:22 am
துபாயிலிருந்து பல நாடுகளில் உள்ள பல நகரங்களுக்கும் நூற்றுக்கணக்கான விமான நிறுவனங்கள் தினமும் நேரடி பயணிகள் விமான சேவையை வழங்கி வருகிறது. அதில் பெரும்பாலும் பயணிகளுக்கு வழங்கப்படும் பேக்கேஜ் அலவன்ஸ் 30 கிலோவாக மட்டுமே இருக்கும். ஒரு சில விமான நிறுவனங்கள் மட்டும் 40 முதல் 50 கிலோ வரை தங்கள் பயணிகளுக்கு பேக்கேஜ் அலவன்ஸை அனுமதிக்கின்றன.
ஆனால், இதில் வினோதமாக துபாயிலிருந்து பாகிஸ்தானிற்கு பயணிகள் விமான போக்குவரத்து சேவை வழங்கும் விமான நிறுவனமான செரீன் ஏர் (Serene Air), 100 கிலோ வரையிலான பேக்கேஜ் அலவன்ஸை எடுத்துச் செல்ல பயணிகளுக்கு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையானது துபாயிலிருந்து லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு பறக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு மட்டும் பொருந்தும் என்றும் விமான நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கான ‘உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக உங்களால் முடிந்த அனைத்தையும் கொண்டு வாருங்கள்’ என்ற பிரச்சாரம் லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு பறக்கும் பயணிகளுக்கு பொருந்தும் என்றும், மேலும் இது ஜூலை 31 அன்றுடன் முடிவையும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், எகானமி வகுப்பு பயணிகளுக்கு அதிகபட்சமாக 3 செக்-இன் பேக்கேஜுடன் 70 கிலோ பேக்கேஜ் அலவன்ஸ் வழங்கப்படும் என்றும், பிசினஸ் வகுப்பில் பறக்கும் பயணிகள் அதிகபட்சமாக 4 செக்-இன் பேக்கேஜுடன் 100 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பேக்கேஜும் 32 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்களுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானியர்கள் உள்ளனர். மக்கள்தொகை புள்ளிவிபரகளின் படி, அமீரகத்தில் சுமார் 1.7 மில்லியன் பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.