Last Updated on: 28th July 2023, 08:40 am
அமீரகத்தில் நடைபெற்ற எமிரேட்ஸ் டிரா (Emirates Draw) போட்டியில் பங்கேற்ற 33 வயதான இந்தியர் ஒருவர் வெற்றி பெற்று, ஒரே நாளில் மாபெறும் அதிர்ஷ்டகாரர் ஆகியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம்ஸை பரிசாக அளிக்கக்கூடிய ‘எமிரேட்ஸ் டிராவின் இரண்டாவது சம்பளத்தை (Second Salary)’ அவர் வென்றுள்ளார்.
எமிரேட்ஸ் டிராவின் இந்தப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்று மெகா பரிசைத் தட்டிச்சென்ற அமீரக குடியிருப்பாளரான முஹம்மது அதில் கான் என்பவர், துபாயில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டிடக் கலைஞராகவும், இன்டீரியர் டிசைனராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள அஸம்கரைச் சேர்ந்த கான் அவரது வெற்றி குறித்து மனம் திறக்கையில், டிராவில் வென்று அதிர்ஷ்டசாலி ஆனதாகவும், 25 ஆண்டுகளுக்கான மாதாந்திர 25,000 திர்ஹம்ஸ் பரிசை வென்றதால் சீக்கிரமாக ஓய்வு (retired) பெற்றுவிட்டது போல உணர்வதாகவும் நெகிழ்ந்துள்ளார். அத்துடன், வெற்றி பெற்றது குறித்து அவருக்கு இ-மெயில் வந்தததைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவரது குடும்பப் பின்னணி குறித்து கூறுகையில், அவரின் வீட்டில் மொத்தம் எட்டு பேர் கொண்ட குடும்பம் உள்ளதாகவும், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அவரது சகோதரர் கோவிட் தொற்றினால் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே, அவரது சொந்த குடும்பம், அவரது சகோதரரின் குடும்பம் மற்றும் பெற்றோரையும் இவரே கவனித்துக்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொகையை வைத்து, அவரது குடும்பத்தை விரைவில் அமீரகத்திற்கு கொண்டு வர விரும்புவதாகக் கூறிய கான், பரிசுத் தொகையைச் செலவிடுவதில் கவனம் முக்கியம் என்பதால், இன்னும் அதைப்பற்றி எதையும் திட்டமிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமீரகத்தில் மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்கும் டிராக்களில் ஒன்றான எமிரேட்ஸ் டிரா, FAST5 கேம் எனும் பெயரில் ஒரு புதிய டிராவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த புதிய டிராவில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள், ஒரேயொரு 25 திர்ஹம் டிக்கெட்டை வாங்குவதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 25,000 திர்ஹம் என்ற பிரமாண்டமான பரிசை வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், எமிரேட்ஸ் டிராவின் இந்த புதிய FAST5 டிராவில் பங்கேற்கும் மூன்று பங்கேற்பாளர்கள் 75,000 திர்ஹம்ஸ், 50,000 திர்ஹம்ஸ் மற்றும் 25,000 திர்ஹம்ஸ் என ஒவ்வொரு ரேஃபிள் டிராவிலும் நிச்சயப் பரிசை வெல்லும் வாயப்பும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.