Last Updated on: 9th July 2023, 10:12 am
ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP), வெளிநாட்டவர்களில் 30, 60 அல்லது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் UAE விசிட் விசா வைத்திருப்பவர்கள், ஒரு முறை மட்டும் தங்களின் விசாவை 30 நாள் நீட்டித்துக் கொள்ள தகுதியுடையவர்கள் என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த விசா நீட்டிப்பை “UAEICP” என்ற ஸ்மார்ட் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எளிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் ICP தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த ஒரு மாத விசா நீட்டிப்பிற்கு நிபந்தனைகள் என்ன என்பதையும், அதற்கான கட்டணம் மற்றும் செலவு எவ்வளவு என்பதையும் ICP வெளியிட்டுள்ளது.
விசா நீட்டிப்பிற்கான நிபந்தனைகள்:
1. ஒரு மாத விசா நீட்டிப்பு சேவைக்கு தகுதி பெற, விசிட்டில் வந்த நபர் விண்ணப்பம் சமர்பிக்கப்படும் போது நாட்டில் இருக்க வேண்டும்.
2. குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். அவற்றுடன் அசல் என்ட்ரி பெர்மிட் மற்றும் புகைப்படம் ஆகியவற்றையும் வைத்திருக்க வேண்டும்.
3. விடுபட்ட தரவு அல்லது ஆவணங்கள் காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். அவ்வாறு முழுமையடையாத விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குப் பிறகு எலெக்ட்ரானிக் அமைப்பில் இருந்து நிராகரிக்கப்படும்.
4. குறிப்பாக, விடுபட்ட ஆவணங்களால் மூன்று முறை தொடர்ச்சியாக ஒரு விண்ணப்பம் நிராகரிப்பட்டால், அந்த விண்ணப்பம் நிரந்தரமாக நிராகரிக்கப்படும்.
5. ஒருவேளை, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நிராகரிக்கப்படும் விண்ணப்பத்திற்கு வழங்கல் கட்டணங்கள் (issuance fee) மற்றும் நிதி உத்தரவாதங்கள் (deposits) ஏதேனும் இருந்தால், அது மட்டுமே திருப்பித்தரப்படும்.
6. மேலும், இந்த பணம் கிரெடிட் கார்டு வாயிலாக விண்ணப்பத் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளும் அல்லது காசோலை அல்லது வங்கிப் பரிமாற்றம் (UAE Banks) வாயிலாக அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள்ளும் திருப்பி அளிக்கப்படும்.
தற்போது ICPயானது, அமீரகத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாட்டில் உள்ள அவர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு, ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலம் நேரடியாக விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையையும் நெறிப்படுத்தியுள்ளது,
இருப்பினும், அமீரகத்தில் உறவினர் அல்லது நண்பருக்கு விசிட் விசா வழங்க நேரடியாக விண்ணப்பிப்பதற்கு, உறவினருக்கான சான்று மற்றும் வருகைக்கான காரணங்கள் போன்ற தகவல்களை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
அத்துடன், GCC குடிமகனாக இருக்கும் ஒருவரின் மணைவி தனது கணவரைப் பார்க்க அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருவதாக இருந்தால், அவர் தனது கணவரின் நாட்டில் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதியை வைத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீட்டிப்புக்கான செலவு:
அமீரகத்திற்கு விசிட் விசாவில் வருபவர்கள் தங்களின் விசிட் விசாவை ஒரு முறை மட்டும் 30 நாட்களுக்கு நீட்டித்துக் கொள்ள 750 திர்ஹம்ஸ் செலவாகும் என்றும் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அறிவித்துள்ளது.
- 500 திர்ஹம் – வழங்கல் கட்டணம்,
- 100 திர்ஹம் – விண்ணப்பக் கட்டணம்
- 100 திர்ஹம் – ஸ்மார்ட் சர்வீஸ் கட்டணம்
- 50 திர்ஹம் – காப்பீடு மற்றும் IA கட்டணம்