Last Updated on: 31st August 2023, 10:13 am
எமிரேட்ஸ் என்றதும் சட்டென நினைவுக்கு வருவது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள். விமானங்களின் பெயரில் இந்த வார்த்தை வருவதை பார்த்திருக்கலாம். ஆம், அதுதான் விஷயம். ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கியமான பிராண்ட்களில் ஒன்றாக திகழும் விமான நிறுவனம் எமிரேட்ஸ். இதை நிர்வகித்து வருவது துபாய் அரசின் ICD எனப்படும் துபாய் முதலீட்டு கழகம். வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனம் எது என்று கூகுளில் தேடினால் எமிரேட்ஸ் தான் முன்னால் வந்து நிற்கும்.
எமிரேட்ஸ் விமான சேவை
ஐநூறு, ஆயிரம் அல்ல. வாரத்திற்கு 3,500 விமானங்களுக்கு மேல் இயக்கி கொண்டிருக்கிறது. பல்வேறு கண்டங்களில் உள்ள 80 நாடுகளை சேர்ந்த 150 நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் பறக்கின்றன. ஒரே ஒரு நேரடி டிக்கெட் எடுத்து கொண்டால் போதும். உலகின் எந்த நாட்டிற்கு கொண்டு சேர்த்து விடும் எமிரேட்ஸ் நிறுவனம். இதற்கான ஏற்பாடுகள் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இனி விஷயத்திற்கு வருவோம்.
புதிய பயண சாதனை
நடப்பு கோடைக் காலத்தில், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சுமார் 50 ஆயிரம் விமானங்களை இயக்கி புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 6 கண்டங்களை சேர்ந்த 140 நகரங்களை இணைத்துள்ளது. இதில் ஒரு கோடியே 40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக எமிரேட்ஸ் மூலம் துபாக்கு பயணம் செய்தவர்கள் எத்தனை பேர் என கணக்கு போட்டால் 20 லட்சம் என வருகிறது.
துபாய்க்கு பறந்த சுற்றுலா பயணிகள்
அதற்கு முக்கிய காரணம் துபாயில் கொட்டி கிடக்கும் உள்கட்டமைப்பு வசதிகள். உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா முதல் சொகுசு மால்கள் வரை, அட்லாண்டிஸ் தண்ணீர் பூங்கா, லாஸ்ட் சாம்பர்ஸ் அக்வாரியம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் என பொழுதை கழிக்க, வாங்கி தீர்க்க, கொண்டாடி மகிழ ஏராளம் இருக்கின்றன. துபாய்க்கு வந்த 20 லட்சம் பேரில் 35 சதவீதம், அதாவது 7 லட்சம் பேர் குடும்பங்களாக வந்துள்ளனர்.
எந்தெந்த நாட்டு மக்கள் ஆர்வம்எந்தெந்த நாடுகளில் இருந்து துபாக்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர் எனத் தேடி பார்த்தால் லிஸ்ட் நீள்கிறது. இங்கிலாந்து, இந்தியா, ஜெர்மனி, பாகிஸ்தான், சவுதி அரேபியா, சீனா, எகிப்து, குவைத் ஆகிய நாடுகள் ஆகும். இங்கு வந்த மக்கள் சுமார் இரண்டு வாரங்கள் துபாயில் நேரம் செலவிட்டுள்ளனர். அப்படியெனில் சுற்றுலா துறைக்கு கொள்ளை லாபம் தான் என்று சொல்லலாம்.
உலக நாடுகள் கோரிக்கை
விஷயம் இத்துடன் முடியவில்லை. பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து துபாய்க்கு அதிகப்படியான விமானங்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இந்த பட்டியலை எடுத்து கொண்டால் வெனிஸ், ஷாங்காய், கோலாலம்பூர், புடாபெஸ்ட், பேங்காக், ஏதென்ஸ், ஆம்ஸ்டர்டாம், பிரிஸ்பேன் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
விமான சேவை விரிவாக்கம்
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பின்னர் எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது சேவையை படிப்படியாக விரிவுபடுத்தி கொண்டே வந்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியா நாட்டின் பாலி நகருக்கு இயக்கப்பட்ட விமான சேவையை சொல்லலாம். தற்போது புதிய சேவைகள், கூடுதல் சேவைகள் தேவைப்படும் நகரங்களை நோக்கி எமிரேட்ஸ் நிறுவனம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. இதன்மூலம் விமான பயணிகள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக எமிரேட்ஸ் மாறி வருகிறது.
குளிர் காலத்தில் அடுத்த டார்கெட்
அடுத்தகட்டமாக குளிர் காலத்திலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க துபாய் சில திட்டங்களை தீட்டி வருகிறது. அதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், மாநாடுகள் உள்ளிட்டவை அடங்கும். இதையும் சரியாக செய்துவிட்டால் எமிரேட்ஸ் நிறுவனம் குளிர் காலத்திலும் புதிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.