Last Updated on: 22nd July 2023, 10:45 am
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், வரவிருக்கும் புதிய உம்ரா சீசனுக்காக நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களைப் வரவேற்கத் தொடங்கியுள்ளதாக கடந்த புதன்கிழமை சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) தெரிவித்துள்ளது.
இதையொட்டி வான்வழிப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் கடல் துறைமுகங்கள் வழியாக வரும் அனைவரையும் வரவேற்பதற்கு ஏற்ற வண்ணம் ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக கூறியுள்ளது. இந்த வருடத்திற்கான ஹஜ் சீசன் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய உம்ரா சீசன் ஜூலை 11 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதில், சவுதி அரேபியா குடிமக்கள், சவுதி அரேபியாவில் வசிப்பவர்கள் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் உம்ரா செய்ய அனுமதி வழங்குவது தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, உம்ராவிற்காக வரும் யாத்திரீகர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதையும், அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உம்ராவிற்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சகம் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
உம்ரா செய்வதற்கும், நபிகள் நாயகத்தின் மசூதிக்குச் செல்வதற்கும் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் https://www.nusuk.sa என்ற நுசுக் தளத்தின் மூலம் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
அது மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் மெக்கா மற்றும் மதீனாவிற்கு வருவதற்கு இந்த தளம் உதவுகிறது மற்றும் அவர்களின் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து சேவைகளை தேர்வு செய்ய அனுமதிக்கிறது. உலகில் உள்ள பழமொழி பேசும் மக்கள் இணையதளத்தை உபயோகிப்பதற்கு எளிதாக பல மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகின்றது. மேலும், மக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக மேப் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளானது சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ திட்டத்தை அடைவதற்கான ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்து தங்கள் இஸ்லாமிய சடங்குகளை நிறைவேற்றுவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதும், அவர்களின் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும் விஷன் 2030ன் ஒரு பகுதியாகும். தற்பொழுது சவுதி அரேபியா அரசு அதற்கு எல்லா வகையிலும் ஆயத்தமாகி வருவது பாராட்டத்தக்கதாகும்.