சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக ஆன்லைன் மார்க்கெட்டிங்.. இலங்கையில் 21 இந்தியர்கள் கைது

கொழும்பு:இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வரும் மக்கள் சம்பளம் பெற்றோ அல்லது சம்பளம் பெறாமலோ வேலை செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிதிகளை மீறி, சுற்றுலா விசாவில் வந்து வேலை செய்த 21 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் வயது 24 முதல் 25 வயது வரை இருக்கும்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, ஆன்லைன் மார்க்கெட்டிங் சென்டர் நடத்தியதாகவும், கம்ப்யூட்டர்கள் மற்றும் தேவையான தொழில்நுட்ப சாதனங்களை பொருத்தி அந்த வீட்டை அலுவலகமாக மாற்றியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கையில், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 31-ம் தேதிவரை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுற்றுலா விசா விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் இன்றி விசா வழங்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சுற்றுலா விசாவில் வந்துள்ளனர்.

இவர்கள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இலங்கைக்கு வந்துள்ளதாக குடிவரவு துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் வெலிசராவில் உள்ள குடிவரவு துறை தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்” என பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times