சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா: ‘மாஸ்க்’ அணிய அரசு உத்தரவு..!

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா: ‘மாஸ்க்’ அணிய அரசு உத்தரவு..!

Last Updated on: 20th May 2024, 10:12 pm

சிங்கப்பூரில், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், 2019 டிசம்பரில், ‘கோவிட் – 19’ எனப்படும் கொரோனா தொற்று முதன்முதலில் பரவியது. இந்தியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுதும் பரவி, கடும் பாதிப்புகளை இந்த தொற்று ஏற்படுத்தியது.

பின், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு நாடுகளில் இயல்புநிலை திரும்பியது.இந்நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இங்கு, கடந்த ஏழு நாட்களில் மட்டும், 25,900 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் சராசரியாக, 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று கூறியதாவது:அடுத்த இரண்டு அல்லது நான்கு வாரங்களில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம்.இந்த காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 60 வயதுக்கு மேற்பட்டோர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், கடந்த 12 மாதங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் உடனடியாக போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், பொது மக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு பொது மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மருந்து பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று ஒரு பரவலான நோயாகக் கருதப்படுவதால், எந்த கட்டுப்பாடும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment